கவுன்சிலர்கள் வரி வசூலிப்பில் ஈடுபட வேண்டும் மேயரின் கணவர் ஐடியாவால் சலசலப்பு
ஈரோடு: மாநகராட்சி மண்டல கூட்டத்தில், விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு பங்கேற்ற மேயரின் கணவர், கவுன்சிலர்கள் வரி வசூலிப்பில் ஈடுபட வேண்டும் என்று சூப்பர் ஐடியா கொடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய கவுன்சிலர்களால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.ஈரோடு மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தில், மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. 18வது வார்டு கவுன்சிலரும், மண்டல தலைவருமான சுப்ரமணியம் தலைமையில் நடந்த கூட்டத்துக்கு, ஆணையாளர் மனிஷ் முன்னிலை வகித்தார். இதில் மண்டலத்துக்கு உட்பட்ட, 15 வார்டுகளின் கவுன்சிலர்களும் பங்கேற்றனர். வார்டுகளில் நிலவும் அடிப்படை பிரச்னை குறித்து பேசினர்.கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க., மாநகர செயலாளரும், மேயரின் கணவருமான சுப்ரமணியம், மாநகராட்சி வருவாயை அதிகரிக்கும் வகையில், வார்டுகளில் வரியை, கவுன்சிலர்கள் வசூலிக்க வேண்டும் என பேசினார்.இதற்கு பதிலளித்து கவுன்சிலர்கள் பேசியதாவது: வார்டுகளில் போதிய அடிப்படை வசதி மேற்கொள்ளப்படவில்லை. பல்வேறு இடங்களில் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. வரி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கேள்விக்கு எங்களால் பதில் சொல்லமுடியவில்லை. இப்படி பல்வேறு பிரச்னை இருக்கும் நிலையில், நாங்கள் எப்படி வரியை வசூலிக்க முடியும்? வரியை வசூலித்து நாங்களே வார்டுக்கு அடிப்படை வசதி செய்து கொள்கிறோம். மாநகராட்சி நிர்வாகத்துக்கு தர முடியாது. இதற்கு நீங்கள் சம்மதமா? இவ்வாறு பேசினர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.ஆணையாளர் மனிஷ் கூறும்போது, ''கவுன்சிலர்கள் முன்வைத்த பிரச்னைகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.