டிரைவர்கள் தகராறு : பயணிக்கு பல் உடைந்தது
பெருந்துறை, ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து, நேற்று முன்தினம் மதியம், தனியார் பஸ் கோவைக்கு புறப்பட்டு சென்றது. பஸ்சை கோவை, நடுபாளையத்தை சேர்ந்த பாலு, 35, என்பவர் ஓட்டி சென்றார். நடத்துனராக பெருந்துறை அடுத்த காட்டுபாளையத்தை சேர்ந்த சுரேஷ், 28, இருந்தார்.பெருந்துறை அடுத்த சரளை அருகே செல்லும்போது, பஸ் டிரைவருக்கும், அவ்வழியாக கேரளாவிற்கு மாடு லோடு ஏற்றிச் சென்ற லாரி டிரைவர் சமீர், 30, என்பவருக்கு இடையே ஒருவரை ஒருவர் முந்தி செல்வதில் போட்டி ஏற்பட்டது. இரண்டு வாகனங்களும் விஜயமங்கலம் டோல்கேட்டில் நின்றபோது, பஸ் டிரைவர் பாலு, பஸ்சில் இருந்த தேங்காய் மூட்டையில் இருந்து, ஒரு தேங்காயை எடுத்து லாரி டிரைவர் சமீர் மீது வீசினார். சமீர் மீண்டும் அந்த தேங்காயை எடுத்து பஸ் டிரைவர் பாலு மீது வீசினார். இதில் தேங்காய், பஸ் டிரைவரின் பக்கவாட்டு சீட்டில் உட்கார்ந்து இருந்த கோவை, கணியூர் சிவசக்தி நகரை சேர்ந்த மாரிமுத்து மனைவி பத்மாவதி, 50, முகத்தில் பட்டது. இதில், அவரின் உதட்டில் காயம் ஏற்பட்டு, பல் உடைந்தது. காயமடைந்த அவரை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.இது குறித்து, பத்மாவதி அளித்த புகார்படி, நேற்று பெருந்துறை போலீசார் பஸ் டிரைவர் பாலு, நடத்துனர் சுரேஷ், லாரி டிரைவர் சமீர் மற்றும் கிளீனர் நிசாத் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.