தலைமறைவானவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த ஈரோடு கோர்ட்
ஈரோடு:ரயில்வே பாதுகாப்பு கமிட்டி தலைவர் என கூறி போலி பணி நியமன ஆணை வழங்கி, 48 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆசாமியை, தேடப்படும் குற்றவாளியாக ஈரோடு நீதிமன்றம் அறிவித்துள்ளது.ஈரோடு காந்திஜி சாலையை சேர்ந்தவர் முருகேசன், 67; இவருக்கு கும்பகோணம் பட்டீஸ்வரம் ராஜராஜன் வீதியை சேர்ந்தவர் பத்மநாபன், 62, அறிமுகமானார். அகில இந்திய ரயில்வே பாதுகாப்பு கமிட்டி தலைவராக இருப்பதாக தெரிவித்து பேசி வந்துள்ளார். ரயில்வே பாதுகாப்பு கமிட்டியில் ஈரோடு பகுதிக்கு உறுப்பினராக்குவதாக கூறியுள்ளார். இதற்கு பணம் செலவாகும் என தெரிவித்துள்ளார். இதற்காக பத்மநாபன் கேட்ட, 48 லட்சம் ரூபாயை காசோலையாக முருகேசன் கொடுத்துள்ளார். அதன் பிறகு உறுப்பினருக்கான பணி நியமன சான்றிதழை பத்மநாபன் வழங்கியுள்ளார். ரயில்வே நிர்வாகத்திடம் முருகேசன் கொண்டு சென்றபோது போலி என தெரிந்தது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவில், முருகேசன் புகாரளித்தார். இதன் அடிப்படையில் பத்மநாபன் மீது, மோசடி உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இது தொடர்பான வழக்கு விசாரணை, ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்--2ல் நடந்து வருகிறது. பத்மநாபன் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் பத்மநாபனை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது