உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆட்டுத் தோலுக்கு உப்பு பயன்படுத்த தடை

ஆட்டுத் தோலுக்கு உப்பு பயன்படுத்த தடை

ஈரோடு: சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க ஆட்டுத் தோலை பதப்படுத்தி பராமரிக்க உப்பை பயன்படுத்த மாசுக் கட்டுப்பாடு வாரியம் தடை விதித்துள்ளது.நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை விரும்பி சாப்பிடுவோர் அதிகம். பொது இடத்தில் ஆடு வெட்டுவதாலும், சுகாதாரமற்ற முறையில் ஆட்டிறைச்சி விற்பதாலும் ஏற்படும் நோய் தொற்றை தடுக்க, மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஆடு வதைக்கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆட்டிறைச்சி கடைக்காரர்கள் இவற்றில் மட்டுமே ஆடுகளை வெட்டி, இறைச்சியில் மாநகராட்சியின் முத்திரை பதிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.ஆடுவதைக் கூடம் மற்றும் ஆடு அறுக்குமிடத்தில் இறைச்சி போக மீதமிருக்கும் தோலில் இருந்து பலவித ஆடை, பொருட்கள் செய்யப்படுகிறது. தோல் பதப்படுத்தப்பட்டு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.சராசரியாக 1,000 கிலோ தோலை பதப்படுத்த பல நிலைகளில் 600 கிலோ உப்பு பயன்படுத்தப்படுகிறது. இந்த கழிவு நீரிலிருந்து வரும் 90 சதவீதம் உப்பு ஆறு, நிலத்தடி நீர், நிலம் ஆகியவற்றில்தான் சேர்கிறது. இது சுற்றுச்சூழலை வெகுவாக மாசடையச் செய்கிறது. ஆட்டுத்தோல், வேறு அனுமதி பெற்ற விலங்கினத்தின் தோலையும், பதப்படுத்தி பராமரிக்க உப்பை பயன்படுத்த மாசுக்கட்டுப்பாடு வாரியம் தடை விதித்துள்ளது. இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாசுக்கட்டுப்பாடு வாரியம், மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதாரப் பிரிவினருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதில், கூறியிருப்பதாவது: மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில், தோலை பதப்படுத்த உப்பு பயன்படுத்துவதை தடை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. உப்பை பயன்படுத்தி தோலை பாதுகாத்தல், உப்பு பயன்படுத்திய தோலை வாகனங்களில் எடுத்துச் செல்வது, ஆடுவதைக்கூடம், பதப்படுத்துதல் குடோன் ஆகியவற்றில் உப்பு பயன்படுத்துதல், உப்பு பயன்படுத்திய தோலை ஏற்றுமதி செய்தல் ஆகியவற்றை தடுக்க வேண்டும். உப்பின்றி தோலை பதப்படுத்தி, பராமரிப்பதை மட்டும் அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.மாநகராட்சிப் பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான மற்றும் தனியார் ஆடுவதைக் கூடங்களுக்கு மாசுக்கட்டுபாட்டு வாரிய புதிய விதிகள், சுகாதாரப் பிரிவு மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, அவர்கள் அதை கடைபிடிக்கின்றனரா? என்பதும் கண்காணிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்