உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு மாவட்டத்தில் சிசு மரண விகிதம் குறைவு

ஈரோடு மாவட்டத்தில் சிசு மரண விகிதம் குறைவு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் குடும்ப நலச் செயல்பாட்டில் முதலிடத்தில் உள்ளது. அத்துடன், சிசு மரண விகிதமும் தேசிய அளவை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.உலகளவில் சராசரியாக மனித வாழ்க்கை ஆணுக்கு 67 வயது, பெண்ணுக்கு 71 வயது. இந்தியளவில் இது 65.8 மற்றும் 68.1 வயதாகவும், தமிழகத்தில் 67.6 மற்றும் 70.6 வயதாகவும் உள்ளது.இறப்பு விகிதம் ஆயிரம் பேருக்கு உலக அளவில் எட்டு என்றும், இந்தியாவில் 7.3, தமிழகத்தில் 7.6 என உள்ளது. மொத்த கரு வள விகிதம் உலக அளவிலும், இந்தியாவிலும் 2.6 என்றும், தமிழகத்தில் 1.7 எனவும் உள்ளது. சிசு மரண விகிதம் உலக அளவில் ஆயிரம் குழந்தைகளுக்கு 46 என்றும், இந்தியாவில் 50 எனவும், தமிழகத்தில் 28 எனவும் உள்ளது. கருத்தடை முறைகளை பின்பற்றுவோர் சதவீதம் உலக அளவில் 46 என்றும், இந்தியாவில் 50 எனவும், தமிழகத்தில் 28 எனவும் உள்ளது.ஈரோடு மாவட்டத்தில் 311 துணை சுகாதார நிலையம், 52 ஆரம்ப சுகாதார நிலையம், எட்டு அரசு மருத்துவமனை, 16 ஊரக குடும்ப நல மையம், நான்கு நகர் நல மையம், அங்கீகரிக்கப்பட்ட 130 தனியார் மருத்துவமனைகள், அங்கீகரிக்கப்படாத 15 தனியார் மருத்துவமனைகளில், குடும்ப நலத்திட்டம் செயல்படுகிறது. இவை அனைத்திலும் உயர் ரக மகப்பேறு சிகிச்சை, குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.குடும்ப நலத்துறை மூலம் நிரந்தர குடும்ப நல சிகிச்சையாக, ஆண்களுக்கு தழும்பில்லா கருத்தடை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டு, 1,100 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. பெண்களுக்கு லேப்ராஸ் கோபிக் முறையில் கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டு, ஊக்கத்தொகையாக 600 ரூபாய் வழங்கப்படுகிறது. ஜூலை மாதம் ஆண்களுக்கு ஐந்து இடங்களிலும், பெண்களுக்கு எட்டு இடங்களிலும் கருத்தடை முகாம் நடந்தது.இதன் பயனாக, ஈரோடு மாவட்டத்தில் சிசு மரணம் குறைந்து, கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.நடப்பாண்டு தமிழகத்தில் மூன்று லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு குடும்ப நல சிகிச்சை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 80 ஆயிரம் பேருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 11 ஆயிரத்து 500 பேருக்கு சிகிச்சை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 3,000 பேருக்கு சிகிச்சை முடிக்கப்பட்டுள்ளது. இது மாநில அளவில் முதலிடம்.ஈரோடு மாவட்டத்தில் பிறப்பு சதவீதம் 14.7ஆகவும், இறப்பு சதவீதம் ஆயிரம் பேருக்கு ஏழு எனவும், சிசு மரண விகிதம் 22.6 என்றும், மகப்பேறு மரணம் 48 எனவும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ