உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போலீஸார் கண்ணெதிரில்சிக்னலில் தவித்த ஆம்புலன்ஸ்

போலீஸார் கண்ணெதிரில்சிக்னலில் தவித்த ஆம்புலன்ஸ்

ஈரோடு: ஈரோடு பி.எஸ்., பார்க் சிக்னலில் நேற்று காலை, நோயாளியுடன் வந்த ஆம்புலன்ஸ் ஒன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது.ஈரோடு மாநகராட்சி பதவிகளுக்கு போட்டியிடும், தி.மு.க.,வினர் உள்பட பிற கட்சியினரும், சுயேட்சைகளும் நேற்று காலை வேட்புமனு தாக்கல் செய்ய குவிந்தனர். மாநகராட்சி அலுவலகம் செல்லும் முன்பாக, பலரும் பி.எஸ்.பார்க்கில் உள்ள அண்ணாதுரை மற்றும் ஈ.வெ.ரா.சிலைக்கு மாலையணிவித்தனர். அங்கிருந்து ஊர்வலமாக மாநகராட்சிக்கு வந்தனர்.பாதுகாப்பு பணியில், இரண்டு போக்குவரத்து போலீஸார் மட்டுமே ஈடுபட்டிருந்தனர். கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, சிக்னலில் இருந்து அனைத்து ரோடுகளிலும் வாகனங்கள் வரிசையாக நின்றன. அப்போது, காந்திஜி ரோட்டில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் ஒன்று, கனி மார்க்கெட் வழியாக செல்ல முடியாமல் நெரிசலில் சிக்கிக் கொண்டது. உள்ளிருந்த நோயாளிக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டது.வரிசையாக வாகனங்கள் நின்றதால், செல்லவும் முடியாமல், நெரிசலில் இருந்து வெளியேறவும் முடியாமல் ஆம்புலன்ஸ் அலைமோதியது. அதன் சைரன் சத்தம் கேட்டு, தி.மு.க.,வினர் உள்பட அனைவரும் விலகி, வழிவிட்டனர். ஆனால், முன்னால் நின்றிருந்த வாகனங்களால் வழி விட முடியவில்லை. அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் இதை கண்டுகொள்ளாமல், அரட்டை அடித்தபடி நின்றிருந்தனர்.முன்னால் நின்றிருந்த அரசு டவுன் பஸ் டிரைவர் முயற்சியால், கிடைத்த சிறிய இடம்வழியாக புகுந்து ஆம்புலன்ஸ் சென்றது.விபத்து அல்லது அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளி, சம்பவ இடத்தில் இருந்து மருத்துவமனை வந்து சேரும் வரையான நேரம், 'கோல்டன் ஹவர்ஸ்' எனப்படுகிறது. விரைவாக மருத்துவமனைக்கு நோயாளியை கொண்டு வருவதில்தான் அவரது வாழ்க்கை அடங்கியுள்ளது. நேற்று காலை பி.எஸ். பார்க் சிக்னலில் இருந்த போலீஸார் இதை அறிய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ