உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நீச்சல் குளம் ஆழம் குறைக்கும் பணி துவக்கம்

நீச்சல் குளம் ஆழம் குறைக்கும் பணி துவக்கம்

ஈரோடு:ஈரோடு வ.உ.சி., மைதானம் நீச்சல் குளத்தில், நீண்ட இழுபறிக்கு பின், நீச்சல் குளத்தின் ஆழத்தை குறைக்கும் பணி துவங்கியுள்ளது.தமிழகத்தில் சென்னை, சேலம், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள மாவட்ட விளையாட்டு மையங்களில், நீச்சல் குளங்கள் அமைந்துள்ளது. தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழாக, பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு, நீச்சல் பயிற்சிக்கான கட்டணத்தையும் நிர்ணயம் செய்கிறது.பள்ளி, கல்லூரி மாணவர்கள், நீச்சல் வீரர், வீராங்கணை மற்றும் புதிதாக நீச்சல் கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது.நீச்சல் குளங்கள், மூன்று அடி முதல் 13 அடி வரை ஆழமும், 13 அடி அகலம், 30 அடி நீளம் இருக்கும். சென்னையில் உள்ள நீச்சல் குளம் மட்டும் 50 அடி நீளம் உள்ளது.தனியார் நீச்சல் குளத்தை காட்டிலும், அரசு நீச்சல் குளத்தில் குறைந்த கட்டணம் வசூலிப்பதால், அதிகப்படியானவர்கள் இங்கு நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வருகின்றனர்.சென்னையில் 2008 டிசம்பர் 31ம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், நீச்சல் குளம் மீது அமைக்கப்பட்டிருந்த மேடை உடைந்து, நீரில் மூழ்கி ஆறு பேர் பரிதாபமாக இறந்துபோயினர்.நீச்சல் குளத்தின் மீது விழா மேடை அமைத்ததாலும், நீச்சல் குளத்தின் ஆழம் அதிகமாக இருந்ததாலும், விபத்தின் போது நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்தனர் என, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் நீச்சல் குளங்களின் ஆழத்தை குறைக்க அரசு உத்தரவிட்டது. அதிகபட்சமாக ஆறு அடி வரையே ஆழம் வைத்துக்கொள்ளும்படி அரசு அறிவித்தது.அரசு மற்றும் தனியார் ஒரு சிலர் மட்டுமே நீச்சல் குளத்தின் ஆழத்தை குறைத்தனர். ஆறு ஆண்டுகளுக்கு பின், கடந்த ஜூன் மாதம், ஆழம் குறைக்கும் பணிக்காக ஈரோடு, சேலம் நீச்சல் குளங்கள் மூடப்பட்டன. அதன் பின், ஆழம் குறைக்காமலேயே மீண்டும் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம், மீண்டும் நீச்சல் குளம் மூடப்பட்டு, கட்டுமானப் பணி துவங்கியது.இப்பணியை மேற்கொள்ளும் சேலம் எஸ்.எஸ்.அசோசியேட்ஸ் நிறுவன அலுவலர் கூறியதாவது:சேலம், ஈரோடு ஆகிய இரண்டு நீச்சல் குளத்தின் ஆழம் குறைக்கும் பணி எங்களுக்கு வழங்கப்பட்டது. சேலம் நீச்சல் குளம் பணிகள் முடித்துவிட்டோம். தற்போது, இங்கு பணிகளை துவங்கியுள்ளோம். ஏற்கனவே உள்ள 11.5 அடி ஆழத்தை, 5.8 அடியாக குறைத்து, புதிதாக தளம் அமைக்கவுள்ளோம். ஆழம் குறைத்ததால், தண்ணீர் வரும் வழிகளும் மாற்றப்படவுள்ளது. இதற்காக ஏழு லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் 30 நாட்களில் முடிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி