கீழ்பவானி வாய்க்காலில் ௨ம் முறையாக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நீட்டிப்பு
பு.புளியம்பட்டி, டிச. 29-பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில், ௧.௦௩ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த ஆக., 15ம் தேதி முதல் டிச.,12ம் தேதி வரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதை பயன்படுத்தி மூன்று மாவட்ட பாசன விவசாயிகள் நெல் பயிரிட்டனர். போதிய நீர் இல்லாமல் நெற்பயிர் கருகியதால், டிச., 12ம் தேதி முதல் மேலும், 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் டிச.,27 வரை திறக்க உத்தரவிடப்பட்டு நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டது. தற்போது அறுவடை நடப்பதால், மேலும், 7 நாட்களுக்கு இரண்டாம் கால நீடிப்பு செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு முதல் கட்டமாக நேற்று காலை, 500 கன அடிநீர், மதியம், 1,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. நீர் திறப்பு, 2,300 கன அடி வரை தண்ணீர் வெளியேற்றப்படும் என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று அணை நீர்மட்டம், 98.26 அடி; நீர் இருப்பு, 27.3 டி.எம்.சி.,யாக இருந்தது. அணை நீர்வரத்து, 953 கன அடியாக இருந்தது.