கீரிப்பள்ள ஓடையை துார்வாராததால் பருவமழை சூழலில் வெள்ள அபாயம்
கோபி, கோபி பஸ் ஸ்டாண்டு அருகே செல்லும், கீரிப்பள்ள ஓடையை துார்வாராததால், பருவமழை பெய்யும் சூழலில், வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.கோபி பஸ் ஸ்டாண்டின், மேற்கு வாயில் வழியே உள்ளே நுழையும் வழியின் குறுக்கே, கீரிப்பள்ள ஓடை செல்கிறது. அதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் அருகே, சத்தி சாலையின் குறுக்கே மற்றொரு பாலமும் உள்ளது. அந்த இரு பாலத்துக்கு இடைப்பட்ட கீரிப்பள்ள ஓடை பகுதியில், செடிகள் முளைத்தும், ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்தும், படுமோசமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியே கழிவுநீர் சீராக செல்லாமல், ஆங்காங்கே குட்டையாக தேங்கி நிற்கிறது. மேலும், தற்போது பருவமழை காலம் என்பதால், இரவு முதல் அதிகாலை வரை, பலத்த மழை பெய்யும் சூழலில், துார்வாராத கீரிப்பள்ள ஓடையில், மழைநீர் தேங்கி ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட கோபி நகராட்சி நிர்வாகம், அப்பகுதியில் உள்ள கீரிப்பள்ள ஓடையை துார்வார மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து கோபி நகராட்சி சேர்மன் நாகராஜ் கூறுகையில், ''வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் கீரிப்பள்ள ஓடை துார்வாரப்படும். தற்போது அங்கு தேவையிருப்பின், தேவையான இடங்களில், தற்காலிமாக ஓடை துார்வாரப்படும்,'' என்றார்.