ஜி.எஸ்.டி., வரி குறைப்பு பொருட்களின் விலை விரைவில் குறையும்
ஈரோடு :ஜி.எஸ்.டி., வரி விதிப்பு குறைக்கப்பட்டுள்ளதால், ஜவுளி, உணவு பொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாக, பல்வேறு துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் ரவிசந்திரன்: வரி குறைப்புடன், முக்கிய, அத்யாவசிய பொருட்களுக்கு, 5 சதவீதம் என ஜி.எஸ்.டி., வரி குறைப்பால், விரைவில் பெரும்பாலான பொருட்களின் விலை குறையும். பல மருந்துகள், பாக்கெட் வடிவ உணவுகள், பரோட்டா என பலவற்றின் வரி, 5 சதவீதமாகி உள்ளது. நடுத்தர மக்கள் பயன்பாட்டு பொருட்கள் விலை குறையும்போது, அவர்களது செலவு கட்டுப்படும். நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. 26 கிலோவுக்குள் மூட்டை அரிசிக்கு, 5 சதவீத வரியை நீக்க வேண்டும். அதையும் செய்திருக்கலாம். பாலியஸ்டர், ரயானுக்கு, 12ல் இருந்து, 5 சதவீதமாக வரி குறைத்ததால் அனைத்து நிலை ஜவுளிகளின் விலையும் குறையும்.தமிழ்நாடு விவசாயிகள் நலச்சங்க செயலர் நல்லசாமி: டிராக்டர் உள்ளிட்ட வேளாண் கருவிகள், உபகரணங்களுக்கான வரியை குறைத்துள்ளனர். பாக்கெட்களில் வரும் உணவு பொருட்களுக்கும் வரி குறைந்ததால், விலை குறையும். இதன் மூலம் வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டிய பொருட்களாக மாற்றி விற்பனை செய்வது அதிகரிக்கும். விவசாயிகள், ஏழை மக்களுக்கான செலவு குறையும்.தமிழ்நாடு நெசவாளர்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் கந்தவேல்: காட்டன் நுாலுக்கு, 5 சதவீதம் வரி விதிப்பு இருந்தது. செயற்கை இழை பஞ்சு மற்றும் நுாலுக்கு, 18 மற்றும், 12 சதவீத வரியாகும். தற்போது செயற்கை இழை பஞ்சு, நுாலுக்கு, 5 சதவீதம் என குறைத்துள்ளனர். 18 மற்றும், 12 சதவீதம் நுாலுக்கு வரி போட்டு, உற்பத்தி செய்யப்பட்ட துணிக்கு, 5 சதவீதம் வரியை கழித்து, 13 முதல், 7 சதவீத ஜி.எஸ்.டி., வரியை இன்புட் கிரெடிட் எடுக்க சிரமமானது. இவை தவிர பிளீச்சிங் உட்பட பல்வேறு நிலைகளில் ஜவுளிக்கான வரி குறைந்ததால் ஆயத்த ஆடை முதல், அன்றாட பயன்பாட்டுக்கான துணிகள் வரை விலை குறையும்.தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் சுதந்திரராசு: மரவள்ளி கிழங்கில் இருந்து எடுக்கப்படும் ஸ்டார்ச் மாவுக்கு, 12 சதவீத ஜி.எஸ்.டி., வரியை, 5 சதவீதமாக்கி உள்ளனர். வரி குறைப்பால், ஸ்டார்ச் மாவை அதிகம் பயன்படுத்தும் விசைத்தறி, பின்னலாடை நிறுவனங்கள், மருத்துவ துறை சார்ந்தோர் பயன் பெறுவர். விவசாயிகளுக்கு ஒரு டன்னுக்கு, 500 ரூபாய்க்கு மேல் கூடுதல் விலை கிடைக்கும்.