பலத்த காற்றுடன் கொட்டிய மழை வாழை மரங்கள் சேதம்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக பல இடங்களில் மழை பெய்தது. அப்போது பலத்த காற்று வீசியதால், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமாகின. பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. டி.என்.பாளையம், கோபியில் பல இடங்களில் மின் வினியோகம் தடைபட்டு மக்கள் அவதிப்பட்டனர்.வேரோடு சாய்ந்த கொன்றை
அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதி களான அண்ணாமடுவு, காட்டூர், கெட்டி சமுத்திரம், பொய்யேரிக்கரை, வட்டக்காடு, எண்ணமங்கலம், வரட்டுப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நேற்று முன்தினம் இரவு, 10:௦௦ மணிக்கு காற்றுடன் கனமழை பெய்தது. பலத்த காற்றால் பல இடங்களில் மரங்களும், கிளைகளும் முறிந்து விழுந்தன. அந்தியூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் பழமையான கொன்றை மரம் வேரோடு முறிந்தது.வாழை மரங்கள் முறிவு
வெள்ளித்திருப்பூர் அடுத்த பட்லுாரில் வேலுச்சாமி என்பவருக்கு சொந்தமான, அறுவடைக்கு தயாராக இருந்த, 500க்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள், பலத்த காற்றால் சேதமானது. இதன் மதிப்பு, 3 லட்சம் ரூபாய் இருக்கும் என தெரிகிறது. இதேபோல் பட்லுார் அருகே பூனைக்கல்மேட்டில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான, 500க்கும் அதிகமான நேந்திரம் ரக வாழை மரங்களும் காற்றால் சேதமாகின. பட்லுார்-வெள்ளித்திருப்பூர் வழியில் பழமையான கருவேலம் மரம், அந்தியூர் அருகே மறவன்குட்டையில் வேம்பு மரம், வெள்ளித்திருப்பூர் நால்ரோடு அருகில் புளியமரமும் முறிந்து ரோட்டில் விழுந்தது.மாறி மாறி பெய்த மழை
டி.என்.பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம், வாணிப்புத்துார், குண்டேரிபபள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணி அளவில் காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது. நேற்று அதிகாலை, ௩:௦௦ மணி வரை கனமழை, மிதமான மழை என மாறி மாறி பெய்தது. பலத்த காற்றால் கள்ளிப்பட்டி பகுதியில் மின் வினியோகம் தடைபட்டது. இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை மக்கள் அவதிக்கு ஆளாகினர். தாளவாடியில் 46 மி.மீ., மழை
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதில் அதிக பட்சமாக தாளவாடியில், 46 மி.மீ., பதிவானது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): மொடக்குறிச்சி-37.20, பவானி, கொடுமுடி தலா-22, பெருந்துறை-13, சென்னிமலை-37, கவுந்தப்பாடி-27.20, ஈரோடு-16, அம்மாபேட்டை-12.20, வரட்டுபள்ளம் அணை-11, கோபி-17.20, எலந்தகுட்டை மேடு-12, கொடிவேரி அணை-9.60, குண்டேரிபள்ளம் அணை-24, சத்தி-9, பவானிசாகர் அணை-6. மழையால் நேற்று அதிகாலை ஈரோடு மாநகரில் இதமான சூழல் நிலவியது. பகலில் வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது.பூங்காவில் முறிந்த அரசமரம்
ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்தது. காற்றை தாக்குப்பிடிக்க முடியாமல் வ.உ.சி., பூங்கா வளாகம் அரசு அருங்காட்சியகம் அருகேயிருந்த பழமையான அரச மரம் நள்ளிரவில் இரண்டாக முறிந்து விழுந்தது. இதில் சிறுவர் பூங்கா சுற்றுச்சுவர், இரும்பு கதவு லேசான சேதமடைந்தது. மலை கோவிலில் மண் சரிவு
சென்னிமலை கோவில் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், மண் சரிவும் ஏற்பட்டு படிகளில் படிந்தது. இந்நிலையில் செவ்வாய்கிழமையான நேற்று கோவிலுக்கு வழக்கம்போல் பக்தர்கள் வந்தனர். மலைப்பாதை சீரமைப்பு பணியால், படிக்கட்டு வழியாகவே செல்ல முடியும். படிக்கட்டுகளில் மண்ணும், கல்லும் கிடந்தது. இதனால் பக்தர்கள் சிரமப்பட்டனர். இதையறிந்த கோவில் நிர்வாகம், கூடுதல் பணியாளர்களை நியமித்து படிக்கட்டுகளில் கிடந்த மண், பெரிய, சிறிய கற்களை அகற்றினர். மாலையில் பக்தர்கள் சிரமமின்றி படியேறி சென்று முருகப்பெருமானை வழிபட்டனர்.மின் தடையால் அவதி
கோபி மற்றும் சுற்று வட்டார பகுதி யில், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, பலத்த காற்றுடன் துவங்கிய சாரல் மழை, விடிய விடிய பெய்தது. நஞ்சைகோபி கிராமம் வழியாக அத்தாணி பிரிவை அடையும் வழியில், பலத்த காற்றால் சாய்ந்த பனைமரம், மின் கம்பத்தின் மீது விழுந்தது. கம்பம் இரண்டாக முறிந்ததில், நஞ்சைகோபி, குழவிகரடு, வெள்ளாளபாளையம் உள்ளிட்ட பகுதியில் இரவு முதல், விடிய விடிய மின்தடை ஏற்பட்டது. இதேபோல் பலத்த காற்றால் மொடச்சூர், ராஜன் நகர், நாயக்கன்காடு பகுதி, குள்ளம்பாளையம் அருகே திருமகள் நகர், செங்கோட்டையன் நகரில், இரவு, 10:30 மணி முதல், நேற்று மதியம் மணி வரை சீரான மின் வினியோகமின்றி மக்கள் அவதிப்பட்டனர்.அம்மாபேட்டையில் சூறாவளி4,500 வாழை மரங்கள் சேதம்
அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு, சூறாவளி காற்றுடன் மிதமான மழை பெய்தது.சூறாவளி காற்றால் குருவரெட்டியூர், ஏழூர் பகுதியில், 1.500 வாழை மரங்கள் சேதமாகின. கேசரிமங்கலத்தில், 3,௦௦௦ வாழைமரங்கள் முறிந்து விழுந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கதளி மற்றும் செவ்வாழை மரங்கள் சூறாவளி காற்றால் சேதமாகி விட்டது. சேத மதிப்பு, 5 லட்சம் ரூபாய் இருக்கும்.ஈரோடு மாவட்ட நிர்வாகம் விரைந்து நிவாரணம் வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நிருபர் குழு