ஊராட்சிகளில் அதிவேக இண்டர்நெட் இணைப்பு
திருப்பூர், கிராமப்புற பகுதிகளுக்கு, குறைந்த கட்டணத்தில், அதிவேக இணைய தள வசதி வழங்குவதற்காக, மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம், பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.'தமிழ்நாடு பைபர் நெட்' (டான்பி நெட்) நிறுவனம் வாயிலாக, சேவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், 260 ஊராட்சிகளுக்கு இணையதள சேவை கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட அளவில் பி.டி.ஓ., தலைமையில், பொறியாளர்கள் இரண்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட 'டான்பி நெட்' பிரிவினர் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில், 13 ஒன்றியங்களில், மொத்தம் 265 ஊராட்சிகள் உள்ளன. அவிநாசியில் குட்டகம், மூலனுாரில் புஞ்சை தழையூர், வேலாம்பூண்டி, திருப்பூர் ஒன்றியத்தில் வள்ளிபுரம், ஊத்துக்குளியில் புதுப்பாளையம் ஆகிய ஐந்து ஊராட்சிகள் தவிர, 260 ஊராட்சிகளிலும் 'டான்பி நெட்' பைபர் ஆப்டிகல் கேபிள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த ஊராட்சிகளில், கிராம ஊராட்சி சேவை மையங்களில், 'டான்பி நெட்' இணையதள கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அனைத்து ஊராட்சிகளிலும், 'டான்பி நெட்' கட்டமைப்புகள் உள்ள கிராம ஊராட்சி சேவை மையங்களில், கிராமசபா நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.