| ADDED : டிச 04, 2025 05:57 AM
அந்தியூர்: அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் செயல்படும் தனியார் 'பார்' கட்டட பணிகளுக்கு, சட்ட விரோதமாக மின்சாரத்தை பயன்படுத்தியதற்காக, 57 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில், தனியார் பார் இரண்டு மாதங்களாக செயல்பட்டு வருகிறது. கோவையை சேர்ந்த ஒருவர் இதை நடத்தி வருகிறார். இந்த பாரில் காலை, 11:00 மணியிலிருந்து இரவு 11:00 மணி வரை சரக்கு விற்பனையும், மது அருந்த அனுமதியும் உள்ளது. தற்போது, பாரில் கூடுதல் கட்டட பணிகள் நடந்து வருகிறது. இப்பணிக்காக, அருகிலுள்ள கோழிக்கடையிலிருந்து, மின்சாரத்தை சட்ட விரோதமாக எடுத்து பயன்படுத்தி வருவதாக, மின்வாரிய பறக்கும் படைக்கு தகவல் கிடைத்தது.இந்நிலையில், நேற்று முன்னாள் ராணுவ வீரர்கள் அடங்கிய, கோபிசெட்டிபாளையம் மின்வாரிய பறக்கும் படை அலுவலர்கள், பார் இயங்கி வரும் இடத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது, சட்ட விரோதமாக மின்சாரத்தை திருடி, மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சவும், வெல்டிங் மற்றும் தகர பைப்களை அறுக்கும் பணிகளுக்கு பயன்படுத்தியதை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து, அந்தியூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அங்கப்பனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு சென்ற மின்வாரிய அலுவலர்கள், சோதனை மேற்கொண்டு, 57 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.