மழையில்லாத காலங்களில் ஓடத்துறை குளத்தை நிரப்ப வலியுறுத்தல்
கோபி, நவ. 2-மழையில்லாத காலங்களில், அவசர கால ஷட்டர் மூலம், குளத்தில் நீர் நிரப்பி கொடுக்க, ஓடத்துறை ஏரி நீர் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோபி அருகே பவானி தாலுகாவுக்கு உட்பட்ட ஓடத்துறை கிராமத்தில், 400 ஏக்கர் பரப்பளவில், சின்னக்குளம், பெரிய குளம் என ஓடத்துறை குளம் அமைந்துள்ளது. கசிவுநீர், மழைநீரை நீராதாரமாக கொண்டு, 300 ஆண்டுகளாக, 175 ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். தவிர, 20 கிராமங்களை சேர்ந்த, இரண்டு லட்சம் மக்களுக்கு குடிநீராதாரமாக உள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் மூன்றாவது வாரம் வரை, குளத்தின் நீர்மட்டம் குறைந்து உட்பகுதி வறண்டு காணப்பட்டது. பத்து நாட்களுக்கு முன் மழைநீர் வழித்தட பகுதியில் பெய்த மழையால், குளத்துக்கு நீர் வரத்தானது. இதனால் சின்னக்குளத்தின் நீர்மட்டம், 13 அடி, பெரிய குளம், 28 அடியாக உயர்ந்தது. இதையடுத்து பெய்த பலத்த மழையால் சின்னக்குளம் முழு கொள்ளளவான, 15 அடி, பெரியகுளம், 30 அடியை தொட்டு கடந்த, 27ல் நிரம்பியது. இதனால் குளத்தில் இருந்து, 250 கன அடி உபரிநீர் வெளியேறுகிறது. இதுகுறித்து ஓடத்துறை ஏரிநீர் பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் வெங்கடாசலம் கூறுகையில், 'கீழ்பவானி பாசனங்களுக்கு, ஆக.,15ல் தண்ணீர் திறந்தால், அதனால் கிடைக்கும் கசிவுநீரால், அக்., மாத முதல் வாரத்தில் ஓடத்துறை குளம் வழக்கமாக நிரம்பும். ஆனால் வாய்க்காலின், 36வது மைல் தொலைவில், கான்கிரீட் தளம் அமைத்ததால், குளத்துக்கு கசிவுநீர் வரவில்லை. அதேசமயம் கீழ்பவானி வாய்க்காலில், அடிக்கடி குறைந்தளவே நீர் நிர்வாகம் செய்ததால், பாசன நிலங்களின் கசிவுநீரும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மழைநீரால் ஓடத்துறை குளம் நிரம்பியுள்ளது. மழையில்லாத காலங்களில், கீழ்பவானி வாய்க்கால் மூலம், காவேரிபாளையத்தில் உள்ள அவசரகால ஷட்டர் வழியாக, ஓடத்துறை குளத்தில் நீர் நிரப்பி கொடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.