கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தொழிலாளி சாவு
சென்னிமலை:பீகார் மாநிலம், சரண் மாவட்டம், அகில்பூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்தேவ்சா என்பவரின் மகன் சுனில்சா, 33. இவர், சென்னிமலை அடுத்த பாலியக்காட்டூர் பகுதியில் தங்கி, பெருந்துறை சிப்காட் 4-வது கிராஸ் பகுதியில், செயல்பட்டு வரும் 'பிரிமியர் டெக்ஸ்டைல்' மில்லின் பாய்லர் பிரிவில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பிங்கிதேவி என்ற மனைவி, நான்கு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பணிக்கு வந்த சுனில்சா, நேற்று காலை வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு இயங்கிக்கொண்டிருந்த கன்வேயர் பெல்ட்டில் அவரது உடல் சிக்கியது. இதில் பெல்ட் அவரை இழுத்துச் சென்று, சுவற்றில் பலமாக மோதியதில், அவரது மார்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் உயிரிழந்தார்.சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.