நாய் கடியால் இறந்த 1,057 கால்நடைகள் இழப்பீடு கோரி அமைச்சர் பரிந்துரை
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நாய் கடித்து இறந்த, 1,057 கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க கோரி, அரசிடம் முறையிடப்பட்டுள்ளது.ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த ஓராண்டுக்கு மேலாக தெரு நாய், வெறி நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து மனிதர்களையும், கால்நடைகளையும் கடிக்கிறது. இதில், கால்நடைகள் அதிக எண்ணிக்கையில் இறப்பதால், கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் பாதிக்கின்றனர். அவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசு உத்தரவிட்டது. இதில், ஈரோடு மாவட்டம் சென்னிமலை, அரச்சலுார் பகுதியில் அதிகமாக பாதித்துள்ளனர்.இந்நிலையில் தமிழக முதல்வருக்கு, செய்தித்துறை அமைச்சர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் நாய்களால் இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரைத்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த, 2024, அக்., 24 முதல், 2025 மார்ச், 20 வரை நாய் கடியால் இறந்த கால்நடைகளுக்கு, 14.97 லட்சம் ரூபாயும், ஈரோடு மாவட்டத்தில், 2024, செப்., 1 முதல், 2025 ஜன., 25 வரை இறந்த கால்நடைகளுக்கு, 8.28 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதன் பின், திருப்பூர் மாவட்டத்தில், 2025 செப்., 29 வரை செம்மறியாடு - 615, வெள்ளாடு-188, கோழி 566, பசு-15 என, 1,384 கால்நடைகள் இறந்துள்ளன. அவற்றுக்கு, 54.93 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில், 2025 ஜன., 26 முதல் ஆக., 31 வரை செம்மறியாடு-321, வெள்ளாடு-176, கோழி, 557, பசு-3 என, 1,057 கால்நடைகள் இறந்துள்ளன. அவற்றுக்கு, 32.05 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும், என பரிந்துரைத்துள்ளார்.