பர்னிச்சர் கடைக்குள் புகுந்த குரங்குகளால் சேதம்
ஈரோடு, ஈரோட்டில் பர்னிச்சர் கடைக்குள் புகுந்த குரங்களால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு, மூலப்பாளையத்தில், செந்தாமரா என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவில் கடை முன்புறம் நிழலுக்காக பந்தல் வசதி செய்யும் பணி நடந்தது. அப்போது இரு பெரிய குரங்குகள் கடைக்குள் திடீரென நுழைந்தது. கடைக்காரர்கள், பக்கத்து கடைக்காரர்கள் சேர்ந்து விரட்டியபோதும் வெளியேறவில்லை. கடையில் இருந்த பர்னிச்சர், தெர்மோகோல், பிளைவுட், பிற உபகரணங்களை சேதம் செய்தன. இவற்றின் மதிப்பு, 50,000 ரூபாய்க்கு மேல் இருக்கும். சிறிது நேரம் கழிந்த நிலையில் அதுவாகவே சென்றன.முன்னதாக குரங்குகள் அட்டகாசம் குறித்து, தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட, 'வனத்துறையிடம் தெரிவியுங்கள்' என்று கூறியுள்ளனர். வனத்துறைக்கு தெரிவித்தபோது 'நாளை வருகிறோம்' என்று தெரிவித்துள்ளனர். குரங்குகளை பிடித்து வனத்துக்குள் விட, அப்பகுதி கடைக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுபற்றி ஈரோடு வனத்துறை ரேஞ்சர் சுரேஷ் கூறியதாவது: ஈரோடு நகருக்குள் சில குரங்குகள் தப்பி வந்துள்ளன. உணவு கிடைப்பதாலும், பக்கத்தில் வனம் இல்லாததாலும், இங்கேயே சுற்றி வருகின்றன. எங்களுக்கு தகவல் கிடைத்து, பல முறை பிடிக்க சென்றும் முடியவில்லை. வனத்தை ஒட்டிய பகுதியாக இருந்தால், அதுவே வனத்துக்குள் செல்லும். விரைவில் பிடித்து வனத்தில் விட முயல்கிறோம். இவ்வாறு கூறினார்.