மழைக்காலங்களில் பாதிக்கப்படும் அவலம் தீர்வு கோரி மலை கிராம மக்கள் முறையீடு
ஈரோடு, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாவட்ட செயலர் ஜான், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது:மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்கிறது. மலைப்பகுதியில் அதிகமாக மழை பெய்கிறது. கோபி அருகே குண்டேரிப்பள்ளம் அணை பின்புறம் விளாங்கோம்பை பழங்குடி கிராமம், 10 கி.மீ., துாரத்தில் உள்ளது.வன விலங்குகள் அதிகம் நடமாட்டம் அடர்ந்த வனப்பகுதி. நான்கு காட்டாறுகளை கடந்தே இங்கு செல்ல முடியும். இக்கிராமத்தில் ஊராளி எனும் பழங்குடியினத்தை சேர்ந்த, 40 குடும்பத்தினர் உள்ளனர். இதில், 30 பள்ளி குழந்தைகள் உள்ளனர். அதே பாதையில், 4 கி.மீ., துாரத்தில் கம்பனுார் பழங்குடி கிராமத்தில், 20 பழங்குடியின குடும்பமும், பள்ளி குழந்தைகள், 10 பேர் உள்ளனர். கடந்த, 2010ல் வனத்துறை மூலம், நான்கு காட்டாறுகளை கடந்த செல்ல நான்கு தரைப்பாலம் கட்டப்பட்டு, 10 கி.மீ., துாரத்துக்கு தார்ச்சாலை அமைத்தனர். சில ஆண்டில் பெருவெள்ளத்தில் தரைப்பாலங்கள் அடித்து செல்லப்பட்டு சாலையும் சேதமானது. இதை செப்பனிட தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கமும் தொடர்ந்து போராடுகிறது. தற்போது கனமழையால் நான்கு தரைப்பாலங்களும் முற்றிலும் சீரழிந்து, யாரும் கிராமத்துக்கு செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மூன்று வாரமாக குழந்தைகளின் கல்வியும் தடைபட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.