அணையில் திருட்டுத்தனமாக மீன் பிடிக்க முயன்றதால் கொலை; 4 பேர் கைது
டி.என்.பாளையம், பெரும்பள்ளம் அணையில் இரவில் திருட்டுத்தனமாக மீன் பிடிக்க வந்த, தந்தை மற்றும் மகனை வாட்ச்மேன் உள்ளிட்ட, நான்குபேர் தாக்கினர். இதில் தந்தை பலியானார். நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.டி.என்.பாளையத்தை அடுத்த கே.என்.பாளையம் அருகே பெரும்பள்ளம் அணை உள்ளது. இங்கு, 14 மீனவர்கள் மட்டுமே மீன்பிடிக்க அனுமதி பெற்றுள்ளனர். இரவில் திருட்டுத்தனமாக மீன் பிடிப்பதை தவிர்க்க, சத்தி கே.என்.பாளையம் ரைஸ் மில் வீதியை சேர்ந்த சக்திவேல், 51, என்பவரை காவலுக்கு நியமித்துள்ளனர். அணையில் மீன் பிடிப்பது தொடர்பாக கே.என்.பாளையம் நரசாபுரம் ஐய்யப்பன், 52, அவரது மகன் மாதேஷ், 30, ஆகியோருக்கும், சக்திவேலுக்கும் மீன் பிடிப்பது தொடர்பாக தகராறு இருந்துள்ளது.இதனால் முன்னெச்சரிக்கையாக தனது உறவுக்காரர்களான கூலி தொழிலாளர்கள் சவுந்தர்ராஜன், ௨௪; கவுதம், ௨௩, ஆகியோரை, இரவில் தன்னுடன் தங்க வைத்திருந்தார். கடந்த, ௧௧ம் தேதி நள்ளிரவில், திருட்டுத்தனமாக மீன் பிடிக்க ஐயப்பன் மற்றும் மாதேஷ் வந்துள்ளனர். காவலுக்கு இருந்த சக்திவேல் உள்ளிட்ட மூவரும் தடுத்ததில், இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சக்திவேல் உள்ளிட்ட மூவரும் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில், ஐயப்பன் சம்பவ இடத்தில் பலியானார். கை, கால்களில் பலத்த காயமடைந்த மாதேஷ், சத்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக விசாரித்த பங்களாப்புதுார் போலீசார், சக்திவேல், சவுந்தர்ரராஜன், கவுதம் மற்றும் பெரியசாமி, 31, ஆகியோரை கைது செய்தனர். நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.