வீட்டுமனை கோரி முஸ்லிம்கள் முறையீடு
ஈரோடு:தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து தலைமையில், பவானி தாலுகா, ஒலகடம், பவானி, கவுந்தப்பாடி, ஜம்பை பகுதியை சேர்ந்த, 160க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் பட்டா வழங்க கோரி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கினர்.மனு விபரம்: நாங்கள் தினக்கூலிகளாகவும், சிறிய அளவில் சுய தொழில், கூலி வேலை செய்து பிழைத்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமான நிலம், வீடு இல்லை. வாடகை வீட்டில், ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினராக வசிப்பது சிரமமாக உள்ளது. எங்களுக்கு வீட்டுமனை வழங்கி, வீடு கட்டித்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.மனுவை பெற்ற டி.ஆர்.ஓ., சாந்தகுமார், ''மொத்தமாக ஒரே இடத்தில் இடம் வழங்குவது சிரமம். அதேநேரம், இதுபோன்றவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க, அரசின் திட்டத்தில், 15 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். பயனாளிகளே, ஒரு ஏக்கர் நிலம் பார்த்து தெரிவித்தால், அரசு நிதியுதவி பெற்று அவ்விடத்தை வாங்கி பிரித்து வழங்கப்படும். கூடுதலாக வரும் தொகையை பயனாளிகள் பிரித்து செலுத்தி பயன் பெறலாம்,'' என்றார்.