பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரிக்கு தேசிய அங்கீகார சான்று
ஈரோடு:பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியானது, வளாக அளவிலான உரிமத்துக்காக, மேத் ஒர்க்ஸ் நற்சான்றிதழ் திட்டத்தில் இரண்டாவது முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் மூலம் கல்லுாரி அனைத்து மாணவர், ஆசிரியர், ஊழியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு மேட் லேப் சிமுலின்க் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட மேத் ஒர்க்ஸ் தயாரிப்புகளுக்கு, வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வரம்பற்ற பயன்பாட்டு உரிமத்தை வழங்குகிறது. கொங்கு பொறியியல் கல்லுாரி பல்வேறு படிப்புகளின் பாடத்திட்டத்தில் மேத் ஒர்க்ஸ் தயாரிப்புகளையும், பணிப்பாய்வுகளையும் உள்ளடக்கியுள்ளது. மேத் ஒர்க்ஸ் மென்பொருளின் சிறந்த பயன்பாட்டை பாராட்டுவதற்காக, மேத் ஒர்க்ஸ் இயக்குனர்கள் ஆனந்த் கீதா கோவிந்தன், அருள்மொழி செல்வன் ஆகியோர், அங்கீகார சான்றிதழை கல்லுாரி முதல்வர் பரமேஸ்வரனிடம் வழங்கினர். நிகழ்வின்போது மேட் லேப் வளாக ஒருங்கிணைப்பாளரும், ஆட்டோ மொபைல் துறை இணை பேராசிரியருமான ஜெகதீசன் உடனிருந்தார். இந்த சாதனைக்காக உழைத்தவர்களை கல்லுாரி தாளாளர் இளங்கோ பாராட்டினார்.