மாநகராட்சியில் மக்கள் குறைதீர் முகாம் புது கமிஷனர் அதிரடி முடிவு
ஈரோடு, ஈரோடு மாநகராட்சியில், 60 வார்டுகள் உள்ளன. மாதேந்தோறும் நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் வார்டுகளில் உள்ள பிரச்னை, மக்களின் கோரிக்கை குறித்து, கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் மக்கள், வியாபாரிகளும் தங்கள் பிரச்னை குறித்து கவுன்சிலர்களிடம் முறையிட்டும், அதிகாரிகளிடம் மனு அளிப்பதும் நடக்கிறது. ஒருசில சமயங்களில் மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர், அதிகாரிகள் இல்லையேல் மனு அளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் வரும் திங்கட்கிழமை முதல் (14ம் தேதி), மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம், நடக்கும் என்று, கமிஷனர் அர்பித் ஜெயின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: மாநகர மக்களின் குறைகளை தீர்க்க வசதியாக, திங்கட்கிழமை தோறும் முகாம் நடக்கவுள்ளது. மதியம், 3:௦௦ மணி முதல் மாலை, 5:௦௦ மணி வரை நடக்கும். இதில் கமிஷனர், மேயர், அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். மக்கள் தங்கள் பிரச்னைகளை மனுவாக அளிக்கலாம். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.