சுடுகாட்டு பாதைக்கு தீர்வு காணாமல் இறந்தால் ஓடிச்செல்லும் அதிகாரிகள்
பவானி, ஆப்பக்கூடல் அருகே ஒரிச்சேரி பஞ்., பாரதிநகர் காலனியில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், தொட்டியன் தோட்டம் பகுதியில் சுடுகாடு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு சென்று வர ஓடைப்பாதை மற்றும் அதை ஒட்டிய தனி நபரின் பட்டா நில வண்டிப்பாதை உள்ளது. இதை நிலத்தின் உரிமையாளர் இரண்டு மாதங்களுக்கு முன் உழுது வேலி அமைத்தார். இந்நிலையில் பாரதிநகர் காலனியை சேர்ந்த துரைசாமி, 50, உடல் நலக்குறைவால் நேற்று இறந்தார்.அதேசமயம் சுடுகாட்டுக்கு செல்ல பாதை கேட்டு, சடலத்துடன் ஆர்ப்பாட்டம், மறியலுக்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். இதையறிந்த ஆப்பக்கூடல் போலீசார் விரைந்தனர். பவானி வருவாய் துறை அலுவலர்களும் மாலையில் சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் முன்பே, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் இரண்டு நாட்களுக்குள், சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை அளந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால், ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். பிறகு இறந்தவரின் உடலை, ஓடை புறம்போக்கு பாதை தடத்தில் கொண்டு சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். சுடுகாட்டுக்கு பாதை கேட்டு, கடந்த ஆறு மாதங்களில் இப்பகுதி மக்கள், மூன்று முறை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. யாராவது இறந்து போனால் பிரச்னை வந்து விடுமோ என்ற நிலையில் மட்டும் பேச்சுவார்த்தைக்கு விரைகின்றனர். உடலை அடக்கம் செய்துவிட்டால், பிரச்னையையும் மறந்து விடுகின்றனர் என்பதும், மக்களின் வேதனையான குமுறலாக உள்ளது.