சூரம்பட்டி அணைக்கட்டை சுற்றி பனைமரம் நடவுப்பணி துவக்கம்
ஈரோடு ச தமிழக அரசு, மாநில அளவில், 6.5 கோடி பனை விதைகளை நடவு செய்யும் திட்டத்தை அறிவித்து, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இலக்கு நிர்ணயித்துள்ளது.இதன்படி ஈரோடு மாவட்டத்துக்கு, 11.25 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கடந்த, 15 நாட்களாக பனை விதைகள் சேகரிக்கும் பணியும், மறுபுறம் பனை விதைகளை ஆறு, ஏரி, குளம், வாய்க்கால் போன்றவற்றின் கரைகள், பொது இடங்கள், அரசு நிலங்கள், விருப்பத்தின் பெயரில் தனியார் நிலங்களிலும் நடவுப்பணி செய்யப்படுகிறது. ஈரோடு, சூரம்பட்டி அணைக்கட்டு கரைகளில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சுப்பு, மாவட்ட துணைத் தலைவர் ஆதவன் ஆகியோர் முன்னிலையில், 5,000 பனை விதைகள் நடவு செய்யும் பணி நேற்று துவங்கியது. பனை விதைகளை நடவு செய்து, மாவட்ட தலைவர் சுப்பு கூறியதாவது:எங்கள் அமைப்பு மூலம், ஒரு லட்சம் விதைகள் நடவு செய்ய திட்டமிட்டு, சென்னிமலை மலையில் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில், 11,000 பனை விதைகள், விஜயமங்கலம் அரசண்ணாமலையில், 6,000 விதைகள், இன்னும் பிற இடங்களில் என சேர்த்து, 22,000 விதைகள் இதுவரை நடவு செய்துள்ளோம்.பல்வேறு கிராமப்பகுதிகளில் சேகரித்த, 30,000க்கும் மேற்பட்ட விதைகள், சங்க அலுவலகத்தில் இருப்பு வைத்து, விரும்பி கேட்பவர்களுக்கு வழங்கியும், நாங்களே நடவு செய்தும் வருகிறோம். இதன் மூலம் மழை பொழிவு அதிகரிக்கும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். இவ்வாறு கூறினார்.