இடித்த இடத்தில் கோவில் கரளவாடி மக்கள் முறையீடு
ஈரோடு, தாளவாடிமலை திகினாரை பஞ்., கரளவாடி கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது: தாளவாடியில் இருந்து, 8 கி.மீ., துாரத்தில் கரளவாடி கிராமம் உள்ளது. இங்கு, 150க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் சமூக குடும்பங்கள் வசிக்கிறோம். அங்குள்ள மாரியம்மன் கோவிலை அனைத்து சமுதாயத்தினரும் வழிபாடு செய்து வருகிறோம். இங்குள்ள லிங்காயத்து சமூகத்தினருக்கும், எங்களுக்கும் வழிபாடு தொடர்பாக பிரச்னை தொடர்கிறது. கோவிலுக்குள் நுழைய தடையுடன், மீறினால் தாக்குவோம் என மிரட்டுகின்றனர். கடந்த, 2022 செப்.,4ல் லிங்காயத்து சமூகத்தினர் கோவிலை இடித்து விட்டனர்.இதுபற்றி எஸ்.பி., அலுவலகம், டி.ஆர்.ஓ., - ஆர்.டி.ஓ.,விடம் மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. இதனால் அவ்விடத்துக்குக்கூட செல்ல முடியாமல், சுவாமியை தரிசனம் செய்ய முடியாமல் உள்ளோம். இடிக்கப்பட்ட இடத்தில் மாரியம்மன் கோவிலை கட்டி, எங்களது வழிபாட்டுக்கு உதவ வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.