இட்லி தயாரிப்பில் பிளாஸ்டிக்? உ.பா., துறையினர் சோதனை
ஈரோடு: இட்லி தயாரிப்பில் துணிக்கு பதில் பிளாஸ்டிக் பேப்பர், பாலித்தீன் கவர்கள் பயன்படுத்துவதாக வடமாநிலங்களில் சர்ச்சை எழுந்தது.தமிழக சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறையினர் உத்தரவுப்படி தமிழகத்தில் அவ்வாறான நடைமுறை உள்ளதா, என ஆய்வுக்கு உத்தரவிட்டது.ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், செல்வன், அருண்குமார் கொண்ட குழுவினர், ஈரோட்டில் இட்லி தயாரித்து விற்கும் ஹோட்டல்கள், தள்ளுவண்டி கடைகள், இட்லி பஜார் எனப்படும் கருங்கல்பாளையம் பகுதியில் ஆய்வு செய்தனர். இதில் பிளாஸ்டிக் பயன்பாடு ஏதும் இல்லை என உறுதி செய்தனர். ஆனாலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், செய்தித்தாள்களில் பலகாரங்களை மடித்து வழங்கியதை கண்டறிந்து, கடைக்காரர்களுக்கு, 9,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.