போலீசார் கவனத்தை திசை திருப்பி மறியல்
ஈரோடு, ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில், தமிழ் புலிகள் கட்சியினர், 80க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திரண்டனர். லக்காபுரம் கரட்டாங்காடு தொழிலாளி முருகேசன், 47, சாவுக்கு காரணமான கந்தசாமி, கணபதி உள்ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தி, மருத்துவமனையில் இருந்து ஜி.ஹெச். ரவுண்டானா வரை ஊர்வலமாக வந்தனர்.பின்னர் பெருந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டு கோஷமிடவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.டவுன் டி.எஸ்.பி., முத்துகுமரன் தலைமையிலான போலீசார், 48 ஆண்கள், 53 பெண்கள் என, 101 பேரை கைது செய்தனர். முன்னதாக கலெக்டர் அலுவலகம் முன் இப்பிரச்னைக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ் புலிகள் கட்சியினர் அறிவித்திருந்தனர். இதனால் போலீசார் கலெக்டர் அலுவலகம் சென்று காத்திருந்தனர். ஆனால் போலீசாரின் கவனத்தை திசை திருப்பி ஊர்வலமாக சிறிது துாரம் சென்று மறியலில் ஈடுபட்டு, போலீசாரை பதற்றத்தில் தள்ளிவிட்டனர்.