உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காவல்துறை அமைச்சு பணியாளர்கள்ஈரோட்டில் பணி புறக்கணிப்பு போராட்டம்

காவல்துறை அமைச்சு பணியாளர்கள்ஈரோட்டில் பணி புறக்கணிப்பு போராட்டம்

ஈரோடு, டிச. 18-ஈரோட்டில், காவல்துறை அமைச்சு பணியாளர் ஏழு பேர் பணியிட மாற்றத்தை திரும்ப பெற கோரியும், புகாரை விசாகா கமிட்டிக்கு பரிந்துரைக்காத எஸ்.பி.,யை கண்டித்தும், பணி புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் பணியாற்றும், அமைச்சு பணியாளர்கள் நேற்று காலை பணிக்கு செல்லாமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண், பெண் ஊழியர்கள் என, 45 பேர் பங்கேற்றனர்.இது குறித்து, தமிழ்நாடு காவல்துறை அமைச்சு பணியாளர் சங்க கிளை தலைவர் முத்து குமாரலிங்கம் கூறியதாவது:எஸ்.பி., அலுவலகத்தில் பணியாற்றும் நிர்வாக அதிகாரி ரகு, பெண் ஊழியர்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். மேலும், ஊழியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, பணி செய்ய விடாமல் தடுப்பதாக கூறி, சங்க நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி சில மாதங்களுக்கு முன் ஈரோடு எஸ்.பி., ஜவகரிடம் மனு அளித்தோம். புகார் மீது விசாரணை நடந்து, அதன் அறிக்கை சென்னை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில் நிர்வாக அதிகாரி ரகு மட்டுமின்றி, புகார் அளித்த ஒரு பெண் உள்ளிட்ட ஏழு பேர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏழு பேர் மீது எந்த புகாரும் இல்லை. இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. ஊழியர்கள் ஏழு பேர் பழிவாங்கப்படுகின்றனர். ஏழு பேரின் பணியிட மாற்ற உத்தரவை, நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும். விசாரணை கமிஷன் அமைத்து ரகு மீதான புகார்களை விசாரிக்க வேண்டும். அக்.,24ல் பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக ஈரோடு எஸ்.பி.,யிடம் புகார் அளித்தோம்.புகாரை விசாகா கமிட்டிக்கு இதுவரை அனுப்பாமல் எஸ்.பி., துரோகம் செய்து விட்டார். விசாரணைக்கு, பெண் ஊழியர்களை அழைத்த ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தனும் தகாத சில வார்த்தைகளை பேசியுள்ளார்.ஏழு பேர் பணியிட மாற்றம் ரத்து செய்யப்படும் வரை பணி புறக்கணிப்பு போராட்டம் தொடரும். பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லையெனில், ஈரோடு வரும் முதல்வர் ஸ்டாலினிடம், அமைச்சு பணியாளர்கள் அனைவரும் குடும்பத்துடன் சென்று, அனுமதி பெற்று மனு கொடுக்க உள்ளோம்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !