கோபி நகராட்சி 23வது வார்டில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம்
கோபி, கோபி நகராட்சி, 23வது வார்டுக்கு உட்பட்ட சாமிநாதபுரத்தில், 180 வீடுகளில், 600 பேர் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் கூலி தொழிலாளர்கள். தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி செய்யாததை கண்டித்து, தங்கள் வீடுகளின் முன் நேற்று காலை கறுப்பு கொடி கட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து நகராட்சி அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கையை மனுவாக வழங்கினால், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து சென்றனர். இதுகுறித்து மக்கள் கூறியதாவது: தண்ணீர் தொட்டி பழுதடைந்துள்ளதால், கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதியுறுகின்றனர். இருபாலருக்கும் தனித்தனியே உள்ள கழிப்பிடம் பராமரிப்பின்றி, கதவுகளின்றி காணப்படுகிறது.சாக்கடை மற்றும் வடிகால் வசதி இல்லை. தெருவிளக்கும் எரிவதில்லை. பொது குடிநீர் குழாயும் இல்லை. இதுகுறித்து பல முறை மனு கொடுத்தும் நகராட்சி நிர்வாகம் தீர்வு காணவில்லை. வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றியதால், பேச்சுவார்த்தைக்கு வந்தனர். இவ்வாறு கூறினர்.