கோபி கோட்டத்தில் ரூ.2.95 கோடி விபத்து நிவாரண நிதி வழங்கல்
கோபி: முதல்வரின் சாலை விபத்து நிவாரண நிதியாக, கோபி வருவாய் கோட்டத்தில், 2.95 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.சாலை விபத்தில், காயமடைவோர் அல்லது பலியாவோரின் குடும்பத்துக்கு, தமிழக அரசின் சார்பில், முதல்வரின் சாலை விபத்து நிவாரண நிதி வழங்கப்படுகிறது. பெருங்காயத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய், பலியாவோரின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது. அந்தந்த சப்-டிவிஷன் டி.எஸ்.பி., பரிந்துரைப்படி, நிவாரண நிதி உரியவரின் குடும்பத்துக்கு, வரு-வாய்த்துறை மூலம் வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டம் கோபி வருவாய் கோட்டத்தில் கோபி, சத்தி, பவானி என மூன்று சப்-டிவிஷனில், 24 போலீஸ் ஸ்டேசன்கள் உள்ளன. இவற்றில் கடந்த, 2008 முதல், நடப்பாண்டு வரை, 351 விபத்து வழக்குகளில் பாதிப்படைந்தவரின் குடும்பத்துக்கு, 2.95 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் குடும்ப வாரிசுகளின் வங்கி கணக்கு மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் அனுப்பியுள்ளதாக, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.