ஆட்டோக்களை தடுக்கும் ஆர்.டி.ஓ.,க்கள் டிரைவர்கள் கலெக்டர் ஆபீஸில் முறையீடு
ஈரோடு, டிச. 10-ஈரோடு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் யூனியன் - சி.ஐ.டி.யு., சார்பில் பொது செயலாளர் ேஷக் தாவூத் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஆட்டோ ஓட்டுனர்கள் மனு வழங்கி கூறியதாவது: ஆட்டோக்களுக்கு வழங்கப்பட்ட உரிமம்படி, பதிவு செய்த இடத்தில் இருந்து நகர பஸ்கள் இயங்கும் துாரமான, 30 கி.மீ., வரை செல்லலாம். இதன்படி ஈரோடு ஆட்டோக்கள் பள்ளிபாளையம், திருச்செங்கோடு, சங்ககிரி வரை செல்லலாம். ஆனால் ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள், அவ்வாறு செல்லும் ஆட்டோக்களை தடுத்து, குற்றச்சாட்டு பதிவு செய்தல், அபராதம் விதிப்பதை தடுக்க வேண்டும்.வங்கி அடமான கடன் பெற்ற ஆட்டோக்களுக்கு, பெயர் மாற்று படிவம் மட்டும் இருந்தால் போதும். ஆனால், பழைய உரிமையாளர் ஆதாரம், குடும்ப அட்டை, மொபைல் எண் கேட்பதை தவிர்க்க வேண்டும். ஆட்டோ மீட்டர் கட்டணம், 2013ல் நிர்ணயித்தனர். மீட்டர் கட்டணத்தில் மாறுதலும், உயர்வும் செய்து செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை, மனுவில் தெரிவித்திருந்தனர்.