சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடல் நீர்
காங்கேயம், சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் கடல்நீர் வைத்து பூஜிக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. இதில் பக்தர்கள் கனவில், சிவன்மலை சுப்ரமணியசுவாமியால் குறிப்பால் உணர்த்தப்படும் பொருள் வைத்து பூஜை செய்யப்படுவது, நுாற்றாண்டு வழக்கமாக உள்ளது. பெட்டியில் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அல்லது நடப்பதை முன்கூட்டி கணிப்பதாக அமைகிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர். கடைசியாக கடந்த மார்ச், 6ம் தேதி முதல் கற்பூரம் மற்றும் பிரம்பு இடம் பெற்றிருந்தது. நேற்று முதல் கடல் நீர் இடம் வைக்கப்பட்டுள்ளது. கோவை இடிகரையை சேர்ந்த பவானி மாரியப்பன், 46, என்ற பெண் பக்தரின் கனவில் இதற்கான உத்தரவு கிடைத்து, ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கடல்நீர், பெட்டியில் வைத்து பூஜிக்கப்படுகிறது.இதுகுறித்து கோவில் சிவாச் சாரியார் ஒருவர் கூறுகையில், 'பெட்டி யில் தண்ணீர் இடம் பெற்றபோது, சுனாமி வந்தது. இதற்கு முன் கடல் நீர் வைக்கப்பட்டதில்லை. இதன் தாக்கம் போகபோகத்தான் தெரியும்' என்றார்.