மேலும் செய்திகள்
கூரை இல்லாத வாரச்சந்தை
11-Sep-2025
புன்செய்புளியம்பட்டி ஒதுக்கப்பட்ட இடத்தில் கடைகளை அமைக்காமல், சாலையை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடை அமைப்பதால், வாரச்சந்தை நாட்களில் மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கிறது.ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள புன்செய்புளியம்பட்டி நகராட்சி வாரச்சந்தை, தமிழகத்திலேயே மிகப்பெரிய சந்தையான பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சந்தையாக உள்ளது. 23 ஏக்கர் பரப்பளவுள்ள சந்தையில், 400க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படுகின்றன.ஈரோடு மட்டுமின்றி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட பகுதிகளிலிருந்து, 2,000க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பொருட்களை விற்கின்றனர். வாரச்சந்தை மேம்பாட்டு திட்டத்தில், நகராட்சி சார்பில் புதிதாக கடைகள் அமைக்கும் பணி ஒரு மாதமாக நடந்து வருகிறது. இதற்காக சந்தை வளாகத்தில் செயல்பட்ட கடைகள், தினசரி காய்கறி மார்க்கெட் பின்புறம் மற்றும் வாரச்சந்தையின் வடக்குப்புறம் குப்பை கிடங்கு அருகே தற்காலிகமாக செயல்பட இடம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. இங்கு போதிய இடம் இருந்தும், 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள், கோவை- சத்தி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டாவது நுழைவு வாயில் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து, கடை அமைத்து வருகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பதோடு, சந்தைக்கு வரும் மக்களும் அவதிக்கு ஆளாகின்றனர். இவர்களால் தங்கள் கடைகளில் வியாபாரம் ஆவதில்லை என, மற்ற வியாபாரிகளும் நேற்று சாலையை ஆக்கிரமித்து கடை அமைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து வாரச்சந்தை வியாபாரிகள் கூறியதாவது: வியாபாரிகளின் இந்த அத்துமீறல் குறித்து குத்தகைதாரர், கவுன்சிலர், நகராட்சி அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் என எல்லா இடத்திலும் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு கூறினர்.அதேசமயம் மக்களும், 'இந்த பிரச்னை வாராவாரம் நடக்கிறது. வியாபாரிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்வதோடு, தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்ய முயற்சிக்கின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்' என்றனர்.
11-Sep-2025