2வது நாளாக சாக்கடை துார்வாரும் பணி
ஈரோடு:ஈரோடு மாநகராட்சி, 23வது வார்டுக்கு உட்பட்ட வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். வீதி, ஜான்சி நகர், சத்தியமூர்த்தி வீதிகளின் சாக்கடைகள், சத்தி ரோட்டில் இணைகின்றன. இதில் அடைப்பு ஏற்படுவதால் மழைக்காலத்தில் கழிவுநீர் வெளியேறி, சாலையில் குளம் போல் தேங்குவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வில், பழைய கல்வெட்டுகளின் அடியில் போடப்படட கான்கிரீட் கட்டுமானங்கள் கழிவுநீரை தடுத்து நிறுத்துவது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால், 50க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் மூலம் சாக்கடையை துார்வாரும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாவது நாளாக நேற்றும் பணி நடந்தது. இப்பணி நிறைவடைந்தால் மழைக்காலத்தில் மீண்டும் சாலைகளில் தண்ணீர் தேங்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.