டாடா எலக்ட்ரானிக்ஸ் குடியிருப்பு குளியலறையில் கேமரா
தொழிலாளி கைது; ஆண் நண்பருக்கு வலை உண்மையை மறைக்க போலீசார் முயற்சிராயக்கோட்டை, நவ. 6'டாடா எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனத்தின் பெண் தொழிலாளர்கள் தங்கியுள்ள குடியிருப்பில், குளியலறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்த சம்பவத்தில், பெண் தொழிலாளி கைது செய்யப்பட்டார். அவரது ஆண் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். ஆனால் முழு உண்மையையும் வெளியில் கூறாமல் போலீசார் மறைக்க முயற்சி செய்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே வன்னியபுரத்தில், 'ஐபோன்' உதிரிபாகங்களை தயார் செய்யும் 'டாடா எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனம் இயங்குகிறது. இங்கு பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் தங்குவதற்காக, உத்தனப்பள்ளி அருகே, லாலிக்கல் பகுதியில், 'விடியல் ரெசிடென்சி' என்ற பெயரில், நிறுவனத்தின் விடுதி கட்டப்பட்டுள்ளது. இங்கு, 11 மாடிகளுடன் கூடிய மொத்தம், 11 அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் தற்போது, 9 கட்டடங்கள் பயன்பாட்டில் உள்ளன. அதில், ஒரு அறைக்கு, 4 பேர் வீதம் மொத்தம், 6,250 தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதிலுள்ள, 4வது பிளாக்கில், 8வது மாடியின் ஒரு குளியலறையில், ரகசிய கேமரா இருப்பதை, 23 வயதான வடமாநில பெண் தொழிலாளி ஒருவர் நேற்று முன்தினம் பார்த்துள்ளார். இதை மற்ற பெண்களுக்கு தெரிவிக்கவே, 2,500க்கும் மேற்பட்ட வடமாநில மற்றும் தமிழக பெண் தொழிலாளர்கள், விடுதி முன் நேற்று முன்தினம் மாலை, 5:00 முதல், நேற்று அதிகாலை, 3:30 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல்கேமரா வைத்தவர்களை கைது செய்ய வேண்டும். விடுதியில் டார்ச்சர் செய்யும் வார்டன்களை மாற்ற வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, கெலமங்கலம் - ராயக்கோட்டை சாலையில், மறியல் செய்ய சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, தங்களது வாகனத்தில் மீண்டும் விடுதிக்கு அழைத்து வந்தனர்.போலீசார் விசாரணையில், ரகசிய கேமரா வைத்தது, அந்த விடுதியில் தங்கி, 2022 முதல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, சந்த் பிரசாந்த் குப்தா என்பவரின் மகள் நீலுகுமாரி குப்தா, 23, என தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் இரவு, போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், அவருடன் நெருங்கி பழகி வந்த ஆண் நண்பரான, பெங்களூருவை சேர்ந்த பொக்லைன் டிரைவர் சந்தோஷ்,, ரகசிய கேமராக்களை நீலுகுமாரி குப்தாவிடம் கொடுத்து, அதை குளியலறைகளில் வைத்து, வீடியோ எடுக்க வைத்து, அதை, 'வாட்ஸாப்' மூலமாக பெற்று, வைரலாக்கியது தெரிந்தது. அவரை உத்தனப்பள்ளி போலீசார் தேடி வருகின்றனர். ரகசிய கேமரா இருப்பதை பார்த்த, 23 வயதான வடமாநில பெண்ணின் வீடியோ கேமராவில் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று வேறு பெண்களின் வீடியோ எடுக்கப்பட்டதா என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை கூறியதாவது: நீலுகுமாரி குப்தா என்ற பெண்ணை கைது செய்துள்ளோம். சந்தோஷ் என்பவரை கைது செய்ய, இன்ஸ்பெக்டர் தலைமையில், 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 32 கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதில் உண்மை இல்லை. ஒரே ஒரு கேமரா தான் இருந்தது. அதையும் கைப்பற்றி உள்ளோம். பெண் ஒருவரின் வீடியோ வைரலானதாக கூறுவது தவறு. இவ்வாறு, அவர் கூறினார்.32 ரகசிய கேமராக்கள்?விடுதி குடியிருப்புகளில் மொத்தம், 32 ரகசிய கேமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதான நீலுகுமாரி குப்தா மற்ற பெண்கள் தங்கியிருந்த அறைக்குள் சென்று சர்வசாதாரணமாக ரகசிய கேமராவை வைத்துள்ளார். பல அறைகளில் ரகசிய கேமரா இருக்கும் என்ற அச்சத்தால், விடுதியில் தங்கியிருந்த, 200க்கும் மேற்பட்ட தமிழக பெண் தொழிலாளர்கள், விடுமுறை எடுத்து ஊருக்கு புறப்பட்டு சென்றனர். வடமாநில தொழிலாளர்கள் பலர், நேற்று வேலைக்கு செல்லாமல் அறைகளில் முடங்கினர். இதற்கிடையே தலா, 10 பெண் போலீசார் அடங்கிய, 8 குழுவினர், விடுதி அறைகளில் ரகசிய கேமரா உள்ளதா என, நேற்று சோதனை நடத்தினர். ரகசிய கேமராவை கண்டறிய பெங்களூருவிலிருந்து சிறப்பு குழுவை வரவழைக்க, போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.மூடி மறைப்புகோவையில், கல்லுாரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், தற்போது தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், 'டாடா எலக்ட்ரானிக்ஸ்' நிறுவன குடியிருப்பில், குளியலறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், உண்மை தன்மையை போலீசார் முழுவதுமாக வெளியே கூறவில்லை. 'டாடா எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனத்தின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த விடாமல் தடுக்க, முழு உண்மையையும் போலீசார் வெளியே கூறாமல் மறைப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எந்த தகவலும் வெளியே செல்லக்கூடாது என, உயர் அதிகாரிகளின் உத்தரவால், பதில் கூற போலீசார் தயங்கி வருகின்றனர்.