தந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற குடிகார மகன் சடலத்தின் அருகில் துாங்கிய கொடூரம்
சென்னிமலை, குடிபோதையில் தந்தையை கொலை செய்த மகன், விடிய விடிய சடலத்தின் அருகில் துாங்கியுள்ளார்.ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்த கொம்பனை கிராமத்தை சேர்ந்தவர் லிங்கப்பன், 68; கூலி தொழிலாளி. இவருக்கு மூன்று மகன்கள். மூவருக்கும் திருமணமாகி விட்டது. தனித்தனியாக வசித்த நிலையில் மூத்த மகன் பொன்னுச்சாமி, 42, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரை பிரிந்து சில மாதங்களாக தந்தையுடன் வசித்து வருகிறார். சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவார்.நேற்று முன்தினம் இரவும் போதையில் வந்த பொன்னுசாமி, தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது கழுத்தை நெரித்ததில் லிங்கப்பன் இறந்து விட்டார். இது தெரியாமல் தந்தை உடல் அருகே துாங்கி விட்டார். அக்கம்பக்கத்தினர் நேற்று அதிகாலை வந்து பார்த்தபோது, லிங்கப்பன் இறந்து கிடக்க, அருகில் பொன்னுச்சாமி துாங்கி கொண்டிருந்தார். அவர்களின் தகவல்படி சென்ற வெள்ளோடு போலீசார் லிங்கப்பன் உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரித்ததில் தந்தையின் கழுத்தை நெரித்ததை பொன்னுசாமி ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார், பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.