| ADDED : ஜன 28, 2025 06:52 AM
ஈரோடு: ''தி.மு.க., அரசு சொல்வதையும் செய்யவில்லை; சொல்லாததையும் செய்யவில்லை,'' என்று, ஈரோட்டில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், கட்சி வேட்பாளரை ஆதரித்து, நேற்றிரவு நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஈழத்தில் தமிழ் இன மக்கள் எரிந்து கருகியபோது, உதயசூரியன் வெகுண்டு எழவில்லை. கருணாநிதி ஈழ மக்களுக்கு செய்த துரோகம் ஒன்றில்லை, இரண்டில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் உழவும், நெசவும் பின்னிப் பிணைந்துள்ளது. ஆனால் இரண்டுமே நலிவடைந்துள்ளது. திராவிட கட்சிகள் போன்று எனக்கும் மொபைல்போன், மின்கட்டணம் இலவசம் என்று சொல்லி ஓட்டு கேட்க தெரியாது. நுாறு நாள் வேலை திட்டத்துக்கு எதிரானவன் நானில்லை. ஆனால், இந்த திட்டத்தில் நட்டு வைத்த மரம், வெட்டிய கண்மாய், சீரமைப்பு செய்த சாலைகள் எத்தனை? ஒரு நாளுக்கு ஒரு மரம் நட்டிருந்தால் கூட, நாடு பசுமை போல காட்சி தந்திருக்கும். அதை விட்டு மக்களை சோம்பேறியாக்கும் வகையில் திட்டம் உள்ளது. 156 லட்சம் கோடி ரூபாய் கடனுள்ள நிலையில் சும்மா இருக்க, நுாறு நாள் வேலை திட்டத்தில் மக்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது.இந்த திட்டத்தில் ஆண்கள் சீட்டாடுகின்றனர். பெண்கள் பல்லாங்குழி ஆடுகின்றனர். பெருந்துறையில் வட இந்தியர்கள் அதிகம் உள்ளனர். அவன் இன்னும், 10 ஆண்டுகளில் முதலாளி. நீ கூலி ஆகி விடுவாய். எங்களை சூத்திரன் என்று சொன்ன, மூத்திரன் கதை முடிந்து விட்டது. இப்போது அவருடைய படத்துடன் திரிகின்றனர். தி.மு.க., அரசு சொல்வதையும் செய்யவில்லை. சொல்லாததையும் செய்யவில்லை. திராவிடனுக்கு ஒரு ஈ.வெ.ரா.,தான். ஆனால், எங்களுக்கு ஓராயிரம் பெரியார் உள்ளனர். இந்த தொகுதியில் மூன்று முறை பிச்சை எடுத்து விட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.