புளியம்பட்டி நகராட்சியை கண்டித்து கடையடைப்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்றோர் கைது
புளியம்பட்டி நகராட்சியை கண்டித்து கடையடைப்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்றோர் கைதுபுன்செய் புளியம்பட்டி, டிச. 8-மந்தை புறம்போக்கு நிலத்தில் சட்ட விரோதமாக வணிக வளாக கட்டடம் கட்டி வரும் பணியை, புளியம்பட்டி நகராட்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். நீதிமன்ற உத்தரவை மீறி அம்மன் நகரில், மழை நீர் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சேகரிப்பு நிலைய கட்டுமானங்களை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், புன்செய்புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அனைத்து கட்சியினர் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்று கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது.கடையடைப்புக்கு தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், நகை கடை உரிமையாளர் உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இதனால் பேக்கரி, டீக்கடை, ஜவுளி கடை, நகை கடை உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் திறக்கப்படாமல், பஸ் ஸ்டாண்ட் கோவை சாலை, பவானிசாகர் சாலை, சத்தி சாலை, தினசரி காய்கறி மார்க்கெட் பகுதிகள் வெறிச்சோடின. போராட்டத்தில் அ.தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., - எஸ்.டி.பி.ஐ.,, நாம் தமிழர் கட்சி, பா.ஜ., - த.வெ.க., உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள், மக்கள் கலந்து கொண்டனர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் கைதுகாலை, 10:30 மணியளவில் பஸ் ஸ்டாண்ட் முன், கோவை சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட, அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த, 20 பெண்கள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் வந்தனர். போராட்டத்துக்கு அனுமதியில்லை என்று போலீசார் தடுத்ததால், சாலையில் அமர்ந்து அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதை தொடர்ந்து சத்தி டி.எஸ்.பி., சரவணன் தலைமையிலான போலீசார், அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.