மேலும் செய்திகள்
ரூ29.85 லட்சம் கையாடல் சகோதரர்கள் மீது வழக்கு
04-Dec-2024
ஈரோடு: டூவீலர் மீது மோதிய விபத்தில், வாலிபரை தாக்கி கொலை செய்த மூவருக்கு தலா, 10 ஆண்டு மற்றும் நான்கு மாத சிறை தண்டனை விதித்து, ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஈரோடு மாநகராட்சி வி.வி.சி.ஆர்., நகர் இரண்டாவது வீதியை சேர்ந்தவர் முகமது அன்சார், 36, எலக்ட்ரீஷியன். திருமணமானவர். இவர், 2017 அக்.,8ல் பைக்கில் தன் நண்பர் முத்தையாவுடன் சென்றார். வி.வி.சி.ஆர்., நகர் சீரங்காயம்மாள் திருமண மண்டபம் அருகே சென்றபோது, முகமது அன்சாரின் பைக், அங்கு நின்று கொண்டிருந்த மொபட் மீது மோதியுள்ளது.இதில், முகமது அன்சாருக்கும், அதே பகுதியை சேர்ந்த நால்வருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், சமாதானம் செய்து இரு தரப்பினரையும் அனுப்பி வைத்தனர். சில நிமிடங்கள் கழித்து முகமது அன்சார், முத்தையா இருவரும் பைக்கில் ஏறி செல்ல முயன்றனர். அப்போது, காமாட்சிக்காட்டை சேர்ந்த தமிழ்செல்வன், லோகு (எ) லோகநாதன், மரப்பாலத்தை சேர்ந்த தியாகராஜன், மெக்கானிக் தினேஷ் (எ) அருண் ஆகியோர், முகமது அன்சாரை தடுத்து நிறுத்தி, சரமாரியாக கடுமையாக தாக்கி, கீழே தள்ளிவிட்டனர்.இதில் பலத்த காயமடைந்த முகமது அன்சாரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, முகமது அன்சார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து முகமது அன்சாரின் அண்ணன் முகமது மன்சூர், ஈரோடு டவுன் போலீசில் அளித்த புகார்படி, அப்போதைய டவுன் இன்ஸ்பெக்டர் விஜயன் விசாரணை நடத்தி, நான்கு பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தார். தமிழ்செல்வன், 36, தியாகராஜன், 36, தினேஷ், 31, லோகநாதன், 31, ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கு விசாரணை, ஈரோடு முதலாம் எண் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தமிழ்செல்வன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துள்ளார்.வழக்கின் இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், முகமது அன்சாரை அடித்து கொலை செய்த வழக்கில், தியாகராஜன், தினேஷ், லோகநாதன் ஆகிய மூவருக்கும் தலா, 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்து, ஈரோடு முதலாம் எண் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் சிவக்குமார் ஆஜரானார்.
04-Dec-2024