உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு அருகே இடிந்து விழுந்த பாலச்சுவர் சீரமைப்பு ரயில் போக்குவரத்து தொடங்கியது; சாலையில் சிக்கல்

ஈரோடு அருகே இடிந்து விழுந்த பாலச்சுவர் சீரமைப்பு ரயில் போக்குவரத்து தொடங்கியது; சாலையில் சிக்கல்

ஈரோடு, ஈரோடு அருகே இடிந்து விழுந்த, ரயில்வே நுழைவு பால பக்கவாட்டு சுவர் சீரமைக்கப்பட்ட நிலையில், ஈரோடு-கரூர் மார்க்கத்தில் நேற்று அதிகாலை மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கியது.ஈரோடு-கரூர் மார்க்கத்தில் சாவடிபாளையம் கேட்புதுார் ரயில்வே நுழைவு பாலம் பல ஆண்டுகளாக உள்ளது. இதன் வழியே ஈரோட்டில் இருந்து கரூர் மார்க்கமாக ரயில்கள் செல்லும். ரயில்வே நுழைவு பாலத்தில் ஈரோட்டில் இருந்து கரூர் மார்க்கமாக செல்லும் பஸ், கன ரக உள்ளிட்ட அனைத்து ரக வாகனங்களும் செல்லும். நேற்று முன் தினம் இரவு, 8:30 மணிக்கு சரக்கு ரயில் சாவடிபாளையம் ரயில்வே பாலத்தை கடந்து சென்ற நிலையில், பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால் இம்மார்க்கத்தில் செல்லும் ஐந்து ரயில்கள் நிறுத்தப்பட்டு, மாற்று பாதையில் இயக்கப்பட்டன. இதேபோல் சாலையில் வாகன போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டது. தகவலறிந்து விரைந்த ரயில்வே நிர்வாகம், இரவே சீரமைப்பு பணியை தொடங்கினர். சாலையின் குறுக்கே விழுந்த கான்கிரீட் தடுப்பை துாக்கி அதே பகுதியில் வைத்தனர். தண்டவாளத்தில் ஜல்லி போட்டு நிரப்பினர். கான்கிரீட் தடுப்பை தாங்க தற்காலிகமாக இரும்பு கட்டுமானம் வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் ரயில்வே அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயில்கள் சென்று வருவதற்கு ஏற்றதாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று அதிகாலை, 2:35 மணியளவில் மீண்டும் ஈரோடு-கரூர் மார்க்கத்தில் ரயில்கள் இயக்க சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அனுமதித்தது. இப்பகுதியில் மட்டும் ரயில்கள், 20 கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகிறது. அதேசமயம் சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஈரோடு-கரூர் சாலையில் ஆர்.டி.இன்டர்நேஷன் பள்ளி வலப்புறம் (வெள்ளகோவில் சாலையில்) தம்பிரான் வலசு பட்டறை என்ற இடத்தில் இணைப்பு ஏற்படுத்தி செல்ல வேண்டும். பின் அங்கிருந்து நஞ்சை ஊத்துக்குளி வலப்புறம் சென்று சாவடிபாளையம் நால்ரோட்டில் அதாவது கரூர் சாலையில் இணைந்து செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், 5 கி.மீ., சுற்றி செல்ல வேண்டும்.தற்போது ரயில்வே நுழைவு பாலத்தின் கீழ் இரும்பு ஆங்கிள் அமைத்து முட்டு கொடுத்து கான்கிரீட் பக்கவாட்டு சுவர் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இந்தப்பணி நிறைவு பெற்று மீண்டும் வாகன போக்குவரத்து துவங்க, 15 நாட்களுக்கு மேல் அவகாசம் பிடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.தொடர்ந்து அதிவேகத்தில் செல்லும் ரயில்களின் அதிர்வால் கான்கிரீட் தடுப்பு நகர்ந்து சாலையில் விழுந்திருக்ககூடும் என ரயில்வே அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். ரயில்வே பாலபணிகளை அமைச்சர் முத்துசாமி, எம்.பி. பிரகாஷ் நேற்று பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை