உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பழங்குடியினர் அருங்காட்சியகம் திறப்பு விழா காணாமல் முடக்கம்

பழங்குடியினர் அருங்காட்சியகம் திறப்பு விழா காணாமல் முடக்கம்

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகரில், 7 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பழங்குடியினர் அருங்காட்சியகம், திறப்பு விழா காணாமலேயே முடங்கியுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானி சாகர் காராச்சிக்கொரை வனத்துறை சோதனை சாவடி அருகே, பழங்குடியினர் சூழல் கலாசார மையம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்க, 2018ல் அப்போதைய தமிழக அரசு, 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இதற்காக, 50 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டு, 2018ல் அடிக்கல் நாட்டி பணிகள் துவங்கின. தோடர், கோத்தர், குரும்பர், பனியர், இருளர் உள்ளிட்ட பழங்குடியினரின் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் மாதிரி கிராமம் அமைக்கப்பட்டது.அங்கு, பழங்குடியின மக்கள் வாழ்வியல் முறை, உணவு பழக்கவழக்கம், விவசாயம், வீடு உள்ளிட்டவை தத்ரூபமாக ஏற்படுத்தப்பட்டது. மேலும் பழங்குடியினரின் மருத்துவ வழிமுறை, பயன்படுத்தும் இசை கருவி மற்றும் பழங்குடியின கிராம மக்களின் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இவற்றை சுற்றுலா பயணியர், கண்டுகளிக்கும் வகையில் இந்த சூழல் கலாசார மையம் அமைக்கப்பட்டது. கடந்த, 2020ல் பணிகள் நிறைவடைந்த நிலையில், வனத்துறையினரின் அலட்சியத்தால், இதுவரை பழங்குடியினர் அருங்காட்சியகம் திறப்பு விழா காணாமல் ஐந்து ஆண்டுகளாக முடங்கியுள்ளது.இதுகுறித்து பழங்குடியின மக்கள் கூறுகையில், 'அருங்காட்சியகம், தற்போது முட்புதர் மண்டி, சிலைகள் உடைந்தும், குடில்கள் சேதமடைந்தும் பயன்பாட்டுக்கு வராமல் கிடப்பில் உள்ளது. அருங்காட்சியகத்தை சீரமைத்து, விரைவில், மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்' என்றனர்.இதுகுறித்து சத்தி புலிகள் காப்பக இணை கள இயக்குனர் குலால் யோகேஷ் விலாஷ் கூறுகையில், ''அருங்காட்சியத்தை வனத்துறை முதன்மை வனப்பாதுகாவலர், அண்மையில் பார்வையிட்டு விரைவில் சீரமைக்க உத்தரவிட்டார். இதற்கு தேவையான நிதியை அரசிடம் கேட்டுள்ளோம். நிதி ஒதுக்கியவுடன் புதுப்பொலிவுடன் அருங்காட்சியகம் அமையும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ