பல்வேறு திட்ட பணிகள் ஈரோட்டில் துவக்கம்
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி, 20வது வார்டுக்கு உட்பட்ட செல்வம் நகரில், கிழக்கு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியை, அமைச்சர் முத்துசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். 21வது வார்டு ராதாகிருஷ்ணன் வீதி, பெரியவலசு நால்ரோடு, 35வது வார்டு அகில்மேடு மூன்றாவது வீதி மற்றும் கண்ணகி வீதி, 36வது வார்டு அனுமந்தராயன் கோயில் வீதி, கொங்காலம்மன் கோவில் வீதி, பிருந்தா வீதி பகுதிகளில், 26.50 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறுபாலங்கள் அமைத்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும் துவக்கி வைத்தார்.அதேபோல, 15வது வார்டு புது மாரியம்மன் கோவில் துறை வீதி, பெரியார் நகர் ஆகிய பகுதிகளில், 10 லட்சம் மதிப்பில் தார்சாலை, மழைநீர் வடிகால், 1வது வார்டு முத்துகிருஷ்ணன் வீதியில், 10 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி என மொத்தம், 56.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 6 புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், கலெக்டர் கந்தசாமி, ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரகுமார், மேயர் நாகரத்தினம், ஆணையர் அர்பித்ஜெயின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.