அறிவை பயன்படுத்தி விரிவு செய்து முன்னேற வேண்டும்
ஈரோடு:ஈரோடு புத்தகத்திருவிழாவின் நேற்றைய மாலை அரங்குக்கு, எம்.பி.என்.எம்.ஜெ., பொறியியல் கல்லுாரி தாளாளர் வசந்தா சுத்தானந்தன் தலைமை வகித்தார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றார். 'எது முன்னேற்றம்' என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி இரா.சுரேஷ்குமார் பேசியதாவது:புவனம் முழுவதும் அமைதி, வளம், வளர்ச்சி, உழைப்பு இருந்தால் மட்டுமே முன்னேற்றம் காண முடியும். தற்போது ஈரானுடனான அமெரிக்கா, இஸ்ரேல் போரால் உலக அளவில் எரிபொருள் பிரச்னையை சந்தித்து விலை உயர்வு வந்துள்ளது. இந்திய அரசு, 'பெட்ரோல், டீசல் உட்பட எரிபொருளை குறைவாக பயன்படுத்தவும், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்' என்ற அழைப்பு விடுத்தது. இதே நிலைதான் உலகம் முழுவதிலும் காணப்படுகிறது. அப்படியானால் குடும்பத்தில் மட்டுமல்ல, நாடுகளுக்குள்ளும் மிகப்பெரிய இணக்கம், அமைதி, சமாதானம், அன்பு நிலவும்போதுதான் வளர்ச்சியை காண முடியும். பணம் அள்ள அள்ள குறையும்: அறிவு அள்ள அள்ள விரிவடையும். இந்த அறிவை நுாலில் இருந்தும், அனுபவத்தில் இருந்தும் பெற முடியும். நுாலில் இருந்து பெறும் அறிவை, கல்வி மூலமே பெற முடியும். அவ்வாறான கல்வியை மிகத்தரமானதாக வழங்க வேண்டும். சமீபத்தில் புளோரிடாவில், 19 வயது நிரம்பாத நாதன் தாமஸ், உலகில் இளம் வயதில் பல்கலை பேராசிரியராகி சாதனை படைத்துள்ளார். கடந்த, 1717ல், 19 வயதில் கோலின் மெக்லாரின் இளம் வயது பேராசிரியராகி சாதனை நிகழ்த்தினார். அவரது, 306 ஆண்டு கால சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.ஒரு மனித மூளை, 40 மொழிகளை கற்று, எழுதி, படிக்க முடியும், என கண்டறிந்துள்ளனர். பாரதிக்கு, 14 மொழி, வீரமங்கை வேலுநாச்சியாருக்கு, 7 மொழி தெரியும் என வரலாறு பதிவிட்டுள்ளது. மனித மூளை திறனாற்றல், 25 லட்சம் ஜிகாபைட் என கூறுகின்றனர். ஐன்ஸ்டீன் கூட, 5 சதவீதத்துக்கும் குறைவான மூளையைத்தான் பயன்படுத்தி உள்ளார் என்பார்கள். மாணவர்கள், இளைஞர்கள் புதிது புதிதாக படிக்க வேண்டும். அறிவை பயன்படுத்தி விரிவு செய்து முன்னேற வேண்டும். இவ்வாறு பேசினார்.முன்னதாக 'அறிவே அழகு அதுவே அதிகாரம்' என்ற தலைப்பில் நியூஸ் 18 தொலைக்காட்சி சேனல் ஆசிரியர் கார்த்திகைசெல்வன் பேசினார்.