ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்துக்கு வரவேற்பு தி.மு.க.,வில் இணைய விருப்பம்; அமைச்சர் தகவல்
ஈரோடு, 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தின்படி, ஈரோட்டில் பெரியசேமூர், அம்பேத்கர் நகர், ராசாம்பாளையம் பகுதியில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி வீடுவீடாக சென்று, தி.மு.க., அரசின் சாதனையை விளக்கியும், மத்திய அரசின் ஒத்துழைப்பு இன்மை பற்றியும் மக்களிடம் விளக்கி, உறுப்பினர் சேர்க்கை நடத்தினர்.பின், நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் பொது நோக்கத்துடன், தமிழகத்தின் நலன் காக்க ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை துவக்கி உள்ளார். இதன்படி கட்சியினர், பூத் கமிட்டியினர் இணைந்து வீடுவீடாக சென்று, ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து, மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய உரிமைகளை வழங்காமல் இருப்பது பற்றி தெரிவித்து, உறுப்பினராக வேண்டும் என்ற பணியை துவங்கி உள்ளோம்.ஈரோடு கிழக்க, மேற்கு, மொடக்குறிச்சி தொகுதிகளில், 816 ஓட்டுச்சாவடிகளில், 15,000 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளோம். வாக்காளர்களை உறுப்பினராக்குவது அரசியல் நோக்கத்துக்காக அல்ல. தமிழகத்தின் வளர்ச்சிக்காக என தெரிவிக்கிறோம். பொதுவானவர்கள், எந்த கட்சியினராக இருந்தாலும், அவர்களிடம் தமிழக வளர்ச்சிக்காகவும், பாதுகாப்புக்காகவும் என தெரிவித்து வருகிறோம். அனைவரும் உறுப்பினராகவும், தி.மு.க.,வில் இணைவதாகவும் தெரிவிக்கின்றனர். நாங்கள் நினைத்ததைவிட பல மடங்கு வரவேற்பு உள்ளது. அத்துடன் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை கேட்டுள்ளோம். இவ்வாறு கூறினார். எம்.பி., பிரகாஷ், எம்.எல்.ஏ., வி.சி.சந்திரகுமார், மாநகர செயலர் சுப்பிரமணியம், மண்டல தலைவர் காட்டு சுப்பு, துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.