சென்னிமலை அருகே மழை வேண்டி பெண்கள் ஒப்பாரி வைத்து வழிபாடு
சென்னிமலை, சென்னிமலை அருகே மழை வேண்டி, பெண்கள் ஒப்பாரி வைத்து நுாதன வழிபாடு செய்தனர். பிறகு கோபித்து கொண்டு சென்ற அவர்களை, ஆண்கள் சமாதானம் செய்து அழைத்து வந்தனர்.சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு ஊரை சேர்ந்த பெண்கள் நேற்று மாலை, 3:30 மணிக்கு ஊர் கிணறு விநாயகர் கோவிலில் ஒன்று கூடினர். பிறகு, 'நம் ஊரில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லை. நம் குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது' என அழுது கொண்டு ஒப்பாரி வைத்தனர். தொடர்ந்து இந்த ஊரில் நாம் இனி பிழைக்க முடியாது. நாம் அனைவரும் வெளியூருக்கு சென்று பிழைப்பு நடத்தி, குழந்தைகளை காப்பாற்றுவோம் என, பெண்கள் அனைவரும் ஒப்பாரி வைத்து அழுது கொண்டே ஊர் எல்லையை கடந்து, 1 கி.மீ., தூரத்தில் உள்ள பிரமலிங்கேஸ்வரர் கோவில் உள்ள இடத்திற்கு வந்தனர்.அங்கு பெண்கள் அனைவரும் ஒன்றாக நின்று, நாம் இனி எந்த ஊருக்கு சென்று வாழ்வது என அழுதனர். அப்போது அவர்களுக்கு பின்னாடியே வந்த ஆண்கள், நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம். மழை வரும்; நாங்கள் எப்படியாவது உங்களை காப்பாற்றுகிறோம். வீட்டுக்கு திரும்பி வாருங்கள் என, பெண்களின் கைகளை பிடித்து கெஞ்சினர். பிறகு பெண்கள் அனைவரும் சமாதானம் அடைந்து விநாயகர் கோவிலுக்கு திரும்பினர்.பின்னர், அனைத்து வீடுகளிலும் இருந்து கொண்டு வந்த உணவை, பெரிய பாத்திரத்தில் வைத்து பெண்களுக்கு வழங்கினர். இது போன்ற நிகழ்ச்சியை நடத்தினால், மழை பொழியும் என்பது இப்பகுதியில் ஐதீகமாக உள்ளது.