மேலும் செய்திகள்
சிறிய ஜவுளிப் பூங்கா அமைக்க விண்ணப்பிக்க அழைப்பு
09-Oct-2024
ஈரோடு:தமிழக பட்ஜெட்டில் நடப்பாண்டில், தலா, 20 கோடி ரூபாய் செலவில் ஈரோடு, கரூர், விருதுநகர் உட்பட, 10 மாவட்டங்களில் சிறிய ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதன்படி கைத்தறி மற்றும் துணி நுால் துறை சார்பில் சிறிய ஜவுளி பூங்காக்கள் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சிறிய ஜவுளி பூங்கா, 'டெக்ஸ்டைல் கிளஸ்டர்' என்ற வடிவில் உருவாகி வருகிறது.இதுபற்றி, கைத்தறித்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் கைத்தறி மற்றும் விசைத்தறி, பெடல் தறி, தானியங்கி தறிகளும் அதிக அளவில் செயல்படுகிறது. தற்போது, சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு கிராமத்தில் அரசு நிலம், 1.5 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு தமிழக அரசின் அறிவிப்பின்படி, 3 கோடி ரூபாயில், ஜவுளி பூங்கா அமைக்கப்படுகிறது. இந்த ஜவுளி பூங்காவில், 100 கைத்தறிக்கான தறிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை ஓராண்டுக்குள் நிறைவு செய்து, செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.தவிர, இம்மாவட்டத்தில் உள்ள ஜவுளி நெசவாளர்களை கொண்ட, 'மெகா கிளஸ்டர்' ஒன்றை இதே இடத்தில் உருவாக்க மத்திய அரசுக்கும் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. 'டெக்ஸ்டைல் கிளஸ்டர்' என வரும்போது, பன்முக தன்மை கொண்ட ஜவுளி நிறுவனங்கள் இங்கு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.மேலும், தமிழகத்தில் அதிக ஜவுளி மையங்கள் உள்ள இடங்களை ஒருங்கிணைத்து, சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை, ஊக்குவிக்கிறோம். அங்கு உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்த, ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவாக அமைக்க முன்வரும் தொழில் முனைவோருக்கு, 2.50 கோடி ரூபாய் வரை தமிழக அரசு நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.இத்திட்டத்தில் குறைந்த பட்சம், 2 ஏக்கர் நிலத்தில், ஒரே வளாகத்தில் குறைந்த பட்சம், 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்க வேண்டும். அச்சிறிய ஜவுளி பூங்காவில் உட்கட்டமைப்பு வசதிகள், கழிவு நீரை சுத்திகரிக்கும் மையங்கள், தொலை தொடர்பு வசதி, ஆய்வு கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருட்க3ள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர்களுக்கான விடுதி போன்றவற்றை ஏற்படுத்த, தமிழக அரசு, 2.50 கோடி ரூபாய் வரை மானியமாக வழங்குகிறது.இதுபோன்ற சிறிய அளவிலான தொழில் பூங்காக்கள் அமையும்போது சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் புதிதாக உருவாகும். ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் விரிவாக்கம் செய்யப்படும். புதிய வளர்ச்சி பெறும். வேலைவாய்ப்பு பன்மடங்கு அதிகரிக்கும். இதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான இடங்களும் கண்டறியப்பட்டு, தொழில் நிறுவனங்கள் இசைவு தந்துள்ளனர். இதுபற்றி, அரசு முறையான அறிவிப்பு விரைவில் அரசு வெளியிடும்.இவ்வாறு கூறினர்.
09-Oct-2024