| ADDED : ஏப் 02, 2024 10:51 PM
கள்ளக்குறிச்சி : கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் தொடர்பான கோரிக்கைக்கு கிராம மக்களிடம் எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த மட்டிகைக்குறிச்சி கிராமத்தின் நடுவே கோமுகி ஆறு செல்கிறது. இதில் தண்ணீர் செல்லும் போது, கிராம மக்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் 5 கிலோ மீட்டர் துாரம் ஊரைச் சுற்றி செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய தேவைக்கு செல்லும் மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். மட்டிகைக்குறிச்சி கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது லோக்சபா தேர்தலையொட்டி உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்து கடந்த சில நாட்களுக்கு ஆற்றில் போராட்டம் செய்தனர்.இந்நிலையில், கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார் நேற்று மட்டிகைக்குறிச்சி கிராமத்திற்கு நேரில் சென்று ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டிய இடத்தினை கிராம மக்களுடன் சென்று பார்வையிட்டார். பின் கிராம மக்களிடம் சட்டசபை கூட்டத் தொடரில், உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டியதின் அவசியம் குறித்து வலியுறுத்துவேன் என உறுதியளித்தார்.