கள்ளக்குறிச்சி, : கள்ளச்சாராயத்தை தடுக்க, தமிழக உள்துறை செயலரின் அதிரடி உத்தரவை பின்பற்றாமல், அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய மரண சம்பவங்கள் அரங்கேறி உள்ளது.தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற இரண்டாம் ஆண்டில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், 2023 மே மாதம் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் பலியாகினர். அதையடுத்து, தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க, அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். தொடர்ந்து, வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கூடுதல் வருவாய் துறை ஆணையர்களுக்கு கடந்தாண்டு ஜூலை 19ம் தேதி உள்துறை செயலர் அமுதா உத்தரவு பிறப்பித்தார்.மேலும், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்கள் விழிப்புடன் செயல்பட்டு கிராமத்தில் கள்ளச்சாராய நடமாட்டத்தை கண்காணித்து கலெக்டர் மற்றும் காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும். மதுவிலக்கு பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குனர் மூலம், மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்படும் தகவல்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராயம் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் தொலைபேசி எண் அல்லது வாட்ஸ் ஆப் எண் அறிவித்து, அதை மதுவிலக்கு அமலாக்க காவல் துறை கூடுதல் இயக்குனர் கண்காணித்து, தகவல்கள் மீது உடனடியாக மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அறிவுறுத்தினார். இனி இதுபோன்ற நிகழ்வு நடந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்தார்.ஆனால், உள்துறை செயலரின் உத்தரவை அதிகாரிகள் கடைபிடிக்காததால், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குறித்து 57 பேர் உயிரிழந்ததுடன், 219 பேர் பாதிப்புக்குள்ளாகினர்.