உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரூ.181.61 கோடி ஒதுக்கிய நிலையில் பணி துவங்குவதில் மெத்தனம்: பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை

ரூ.181.61 கோடி ஒதுக்கிய நிலையில் பணி துவங்குவதில் மெத்தனம்: பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு 181.61 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகளின் மெத்தனத்தால் பணிகள் துவங்கப்படாமல் உள்ளது. பணிகளை விரைந்து துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கள்ளக்குறிச்சி நகராட்சி 21 வார்டுகளை கொண்டது. மொத்தம், 15.87 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட நகராட்சியில், 18 ஆயிரத்து 490 குடியிருப்புகள் உள்ளன. இங்கு 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மாவட்ட தலைநகரமாக இருப்பதால் நகரம் விரிவாக்கம் அடைவதுடன் ஓட்டல்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நகரில் உருவாகும் கழிவு நீரை முறையாக வெளியேற்ற போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால் மழைக்காலங்களில் சாலைகள், குடியிருப்புகள் மத்தியில் கழிவு நீர் வழிந்தோடுகிறது. நகராட்சி குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கோமுகி ஆறு, சித்தேரி, தென்கீரனுார் ஏரிக்கு சென்று தேங்குகிறது. ஆற்றில் கழிவு நீர் கலப்பதால், கடும் விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. ஏரி பாசனத்தை நம்பி உள்ள விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதனால் ஆறு மற்றும் ஏரிகளில் கழிவு நீர் தேங்குவதை தடுக்க, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

நிதி ஒதுக்கீடு

இந்நிலையில் கள்ளக்குறிச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் மூலம் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற, கடந்தாண்டு நவம்பரில், 181.63 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதில் 153.86 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தவும், 10 ஆண்டுகள் கழிவு நீர் சுத்திகரிப்பு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள 20.93 கோடி ரூபாயும், 5 ஆண்டுகள் பராமரிப்பு பணிகளுக்கு 6.84 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது.தொடர்ந்து, நகராட்சி பகுதியில் 14 ஆயிரத்து 79 குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டது. பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அதிகாரிகளின் மெத்தனத்தால் ஆரம்பகட்ட பணிகள் எதுவும் இதுவரை துவங்கப்படாமலேயே உள்ளது. நகராட்சி பகுதியில் கழிவு நீரை சுத்தகரிப்பு செய்து வெளியேற்றும் பொருட்டு பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக துவங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை