உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பட்டுவாடாவை கச்சிதமாக முடித்த தி.மு.க., அ.தி.மு.க.,

பட்டுவாடாவை கச்சிதமாக முடித்த தி.மு.க., அ.தி.மு.க.,

திருக்கோவிலுார், - கள்ளக்குறிச்சியில் தி.மு.க., வை போல் அ.தி.மு.க., வும் ஓட்டுக்கு 300 ரூபாய் வீதம் வழங்கியதால் வாக்காளர்கள் யார் பக்கம் நிற்பார்கள் என்ற பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. வேட்பாளர் அறிவிப்பில் துவங்கி பொதுக் கூட்டம், ஓட்டு சேகரிப்பு என இரு கட்சிகளுமே பணத்தை தண்ணீராக செலவழித்து வருகிறது. இதன் காரணமாக தேர்தல் களம் கோடை வெப்பத்தை காட்டிலும் அனல் பறக்கிறது. கடைசி நேர கவனிப்பை பொறுத்தே வெற்றி தோல்வி அமையும் என கணித்து வந்த நிலையில், கடந்த 14ம் தேதி தி.மு.க., அதிரடியாக ஓட்டுக்கு 300 ரூபாய் பட்டுவாடா செய்தது. இதனை அமைதியாக பார்த்திருந்த அ.தி.மு.க., நேற்று தொகுதி முழுவதும் அதே 300 ரூபாயை பாரபட்சம் இன்றி விநியோகித்தது. இரண்டு கட்சிகளுமே பண விநியோகத்தில் பிரச்னை இன்றி கச்சிதமாக வாக்காளர்களிடம் கொண்டு போய் சேர்த்ததால், ஓட்டு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இரு கட்சிகளுமே தங்களுக்கு தான் சாதகம் என தங்களுக்கான சாத்திய கூறுகளை சுட்டிக்காட்டி விவாதித்து வருகின்றனர்.இந்நிலையில் அ.தி.மு.க., வை காட்டிலும் ஒரு ஓட்டாவது நாம் அதிகம் பெற்று நமது செல்வாக்கை நிரூபித்து விட வேண்டும் என்ற கட்டாயத்தில் தி.மு.க., வினர் நேற்று சில இடங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் பரிசு பொருட்களை கொடுத்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியை பொருத்தவரை தேர்தல் துவக்க காலத்தில் இருந்து இன்று வரை வெற்றி தோல்வி யாருக்கு என எளிதில் கணிக்க முடியாத வகையில் போட்டி களம் சமமாக இருந்து வரும் நிலையில் சாதகம் யாருக்கு என்பதை உறுதிப்படுத்த வாக்காளர்கள் அமைதியான முறையில் தயாராகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி